Monday 25 June 2018

ஸ்ரீ ராகவேந்திரர் கனவில் வர கடைபிடிக்க வேண்டிய விரதம்

ஸ்ரீ ராகவேந்திரர் கனவில் வர கடைபிடிக்க வேண்டிய விரதம்

மகான் ராகவேந்திரரை கனவில் காணவிரும்பும் பக்தர்கள் அதற்குரிய விரதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும். 

இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

மகானை கனவில் காண்பதற்கான விரத பூஜை ஆரம்பிக்கும் முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
ஸ்ரீ காம தேநுவே

என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்து ஸ்ரீராகவேந்திரரை நம்பிக்கையுடன் வழிபட்டால் கனவில் நிச்சயம் தரிசனம் தருவார். அவர் தரிசனம் கிடைத்தால் நமது குறைகள் நீங்கும்.

No comments:

Post a Comment