Monday, 25 June 2018

100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம் - ஜுவாலா முகி கோவில்

100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம் - ஜுவாலா முகி கோவில்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இறைத் தலங்களில் அறிவியலின் பார்வைகளுக்கு புதிர்களாக பல நிகழ்ச்சிகள் நடந்ததை செய்திகளில் படித்திருப்போம். இன்றைய நவீன யுகத்தில், எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், விஞ்ஞானத்தால் விடை காண முடியாத ஆன்மிக விஷயங்களை புதிரான மன நிலையில்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோவிலின் தீபம் அணையாமல் தொடர்ச்சியாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பது அந்த புதிரை இன்னும் சிக்கலாக மாற்றுகிறது.

ஜுவாலா முகி :

இறை சக்தியின் ஆற்றல் நிறைந்த இடம் என பக்தர்களால் வணங்கப்படும் அந்த ஜுவாலா ஜி கோவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தர்மசாலா நகரிலிருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் குடி கொண்டுள்ள ஜுவாலாமுகி தேவியின் அருளைப் பெற ஆண்டு முழுவதுமே மக்கள் கோவிலுக்கு வருகின்றனர். அந்த கோவிலில் உள்ள தீபச்சுடர்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டே இருக்கிறது.

51 சக்தி பீடங்கள் :

தனது தந்தையான தட்சன், கணவர் சிவபெருமானை யாகத்துக்கு அழைக்காமல் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த பராசக்தி தன்னையே அழித்துக்கொண்டதால், அவளது உடலை சுமந்து கொண்டு ருத்ர தாண்டவமாடிய சிவபெருமானை சாந்தப்படுத்த, மகாவிஷ்ணு தன் சக்ராயுதம் மூலம் பராசக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் விழச்செய்தார். அவ்வாறு விழுந்த பகுதிகள்தான் 51 சக்தி பீடங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. அவ்வகையில் பராசக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில் ஆகும் என்பது ஐதீகம். அந்த கோவிலில் எரியும் அணையாத சுடரானது, பராசக்தியின் நாக்கு விழுந்த நாள் முதலாக எரிவதாக புராண குறிப்புகள் உள்ளன. இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன.

தங்கக்குடை பரிசு :

பொதுவாக, நெருப்பு எரிவதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு நிலையில் எரிபொருள் தேவை என்ற நிலையில், இக்கோவிலில் எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்துக்கு அப்படி எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் எரிவது எல்லா காலத்திலும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. முகலாய அரசர் அக்பர் அந்த ஜோதியின் மகத்துவம் பற்றி அறிந்து தங்கக்குடை ஒன்றை பரிசு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஞ்ஞானிகள் ஆய்வு :

அணையாத தீபம் பற்றி கேள்விப்பட்ட பிற்கால விஞ்ஞானிகள் சிலர் அப்பகுதியில் பூமிக்கடியில் எரி மலைகள் இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயு அத்தீபம் எரிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்கள். 1970-ம் ஆண்டுகளில் இந்திய அரசு அப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்ய புவியிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்பியது. பல காலம் ஆராய்ந்த குழுவினர், அப்பகுதியில் எங்குமே இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தெரிவித்தனர். 

ஆனால், ஜுவாலா ஜி கோவிலில் அணையாமல் எரியும் ஜோதிக்கு என்ன காரணம் என்று தங்களால் அறிவியல் ரீதியான விடை காண முடியவில்லை என்றும் அறிக்கை அனுப்பியதாகவும் தகவல்கள் உள்ளன. அந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளில், சமஸ்கிருதம், தேவநாகரி, மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் 1158, 1745 மற்றும் 1802 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகின்றன.

நவ துர்க்கைகள் :

அங்கு சுடர் விடும் ஜோதி வடிவத்தின் ஏழு ஜுவாலைகளாக தெரிவது சப்த கன்னியர்கள் என்றும், 9 ஜுவாலைகளாக தெரிவது நவ துர்க்கைகள் என்றும் பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது. சுடர் நீலநிறத்தில் பிரகாசமாக எரிவதால் அதற்கான எரிபொருள் முழுமையாக பயன்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கையான எரிபொருளுக்கான மூலம் எதுவும் அறியப்படாத நிலையில் ஜுவாலா ஜி கோவிலில் இன்று வரை அணையாமல் ஜோதி சுடர் விடுகிறது.

No comments:

Post a Comment