
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து 7கி.மீ., தொலைவில் உள்ள தலம் ஸ்ரீவாஞ்சியம். இது காசிக்கு சமமானதாகப் போற்றப்படுகிறது. திருமகளுக்கும், திருமாலுக்கும் இடையே இருந்த ஊடல் சண்டையாக மாறியது. ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டனர். மனைவியைப் பிரிந்த திருமால் தேவியைத் தேடி அலைந்தார். இறுதியில் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, தன்னை விட்டு திருமகள் என்றும் நீங்காத வரத்தைப் பெற்றார்.
ஸ்ரீயாகிய திருமகளை வாஞ்சையுடன் பெற்ற சிறப்பால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என்றானது. மனைவியைப் பிரிந்தவர்கள், மனைவியின் அன்புக்காக ஏங்குபவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது நல்லது. உயிரைப் பறிக்கும் எமதர்மராஜா, இங்கு சிவனை வழிபடும் பாக்கியம் பெற்றார். அவர் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவ்வூரில் இறப்பவர்களுக்கு நரகத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் இல்லை என்பது நம்பிக்கை. எமன் வழிபட்ட காரணத்தால் இவ்வூரில் யாரும் இறக்கநேரிட்டால் தீட்டு என்று நடை சாத்தும் வழக்கம் இல்லை. கோயில் திருவிழாவில் எமவாகனத்தில் ஈசனைத் தரிசிப்பது சிறப்பாகும். காசியில் கங்கையில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களை ஸ்ரீவாஞ்சியத்திற்கு வந்து வாஞ்சிநாதரை வழிபட்டு இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடிப் போக்கிக்கொள்வதாக தலவரலாறு கூறுகிறது. மணம் கமழும் சந்தனமரம் இங்கு தலவிருட்சமாக உள்ளது.
No comments:
Post a Comment