Tuesday, 12 September 2017

குறையொன்று "உண்டு' மறைமூர்த்தி கண்ணா


"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற ராஜாஜியின் பாடலைக் கேட்டால் மனம் பரவசப்படுகிறது. ஆண்டாள் நாச்சியார் தன் பாசுரத்தில் ""குறையொன்றும் இல்லாத கோவிந்தா!'' என்று கண்ணனைப் போற்றுவதைக் காணலாம். ஆனால், குறையொன்றுமில்லாத விஷ்ணுவுக்கும் முன்பு ஒரு குறை ஏற்பட்டதாம். 

வால்மீகி மகரிஷி ராமாவதாரத்தில் பட்டாபிஷேகத்தைப் பற்றி வர்ணிக்கும்போது, 

""வசிஷ்டர் வாமதேவாதி ரிஷிகள் எட்டுபேர் கூடி நின்று ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த காட்சி, தேவலோகத்தில் இந்திரனுக்கு அஷ்டவசுக்கள் எட்டுப்பேர் கூடிநின்று பட்டம் சூட்டியது போல இருந்தது'' என்று குறிப்பிட்டுவிட்டார். ராமபிரானோ ஏகபத்தினி விரதனாக, சீதையை மட்டுமே மனைவியாக ஏற்று வாழ்ந்தவர். இந்திரனோ பெண் பித்தன். கவுதம ரிஷியின் பத்தினி அகல்யாவை மறைமுகமாக நாடிச் சென்றவன். இந்த வால்மீகி இந்திரனோடு தன்னை ஒப்பிட்ட விதம், பெருமாளுக்கு பெரிய மனக்குறையாக இருந்தது. இந்த மனக்குறையை விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் போக்கிக் கொண்டார்.

தேவேந்திரன் தன்னை வழிபடாத ஆயர்களைத் துன்புறுத்தும் விதத்தில் ஆயர்பாடியில் அடைமழை பொழியச் செய்தான். அந்த சமயத்தில் கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காப்பாற்றினார். இந்திரனே தன் தவறை உணர்ந்து கிருஷ்ணரிடம் ஓடிவந்து சரணாகதி அடைந் தான். 

பசுக்களையும், ஆயர்களையும் காத்தவன் என்னும் பொருளில் ""கோவிந்தன்'' என்ற திருநாமம் சொல்லி வாழ்த்தி, கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். இந்த வைபவத்தை "கோவிந்த பட்டாபிஷேகம்' என்பர். ஆயர்கள் கண்ணனையே தங்கள் மன்னனாக ஏற்று அன்றுமுதல் "கோவிந்தராஜன்' என்று அழைத்தனர். ராமபட்டாபிஷேகத்தில் நேர்ந்த குறை கிருஷ்ணரின் கோவிந்த பட்டாபிஷேகத்தில் நீங்கியது.

No comments:

Post a Comment