
பிருகு முனிவரின் மனைவி கியாதி, ஒருமுறை அசுரர்களுக்கு அடைக்கலம் தந்தாள். தேவர்கள் கியாதியின் செயலைக் கண்டிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு தன் சக்ராயுதத்தை ஏவினார். சென்ற வேகத்தில் சக்கரம் கியாதியை கொல்ல, பிருகுமுனிவர் கடும்கோபத்திற்கு ஆளானார். ""என் மனைவியைக் கொன்ற விஷ்ணுவும் மனைவியை விட்டுப் பிரியக் கடவது,'' என்று சபித்துவிட்டார். பிறகு தன் கோபமான சாபத்துக்காக வருந்தி தவத்தில் அமர்ந்தார். சாபத்தின் படி பெருமாள் ராமாவதாரம் எடுத்து சீதையைப் பிரிந்தார். ராவண வதம் முடித்து சீதையை மீட்டு வந்த ராமர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு முனிவரைக் கண்டு வணங்கினார். அவ்விடத்தில் பிருகுமுனிவரின் வேண்டுகோளின்படி வேதநாராயணப் பெருமாளாகவும் எழுந்தருளினார். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலுள்ள மன்னார்கோவில் கிராமத்தில் உள்ளது. இங்கு கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வேதநாராயணபெருமாள் வீற்றிருக்கிறார். பிருகுமுனிவருக்கும் சன்னதி உள்ளது. பிருகுவின் பேரன் மார்க்கண்டேய மகரிஷியும் இங்கிருக்கிறார். இக்கோயிலில் யானைமுடுக்கு, பூனை முடுக்கு என்று இருபகுதிகள் உள்ளன. யானை முடுக்கில் பரமபதநாதர் அமர்ந்தகோலத்திலும், பூனை முடுக்கில் ரங்கநாதப்பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர். குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி, கொடிமரம், தேர் ஆகியவையும் உள்ளன. ஆதிகாலத்தில் வேதநாராயணபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்பவர்கள், தன் தவறை உணராமல், பிறரைப் பழித்த பாவத்திலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்
No comments:
Post a Comment