Wednesday, 13 September 2017

இரவிலும் நீராடும் தீர்த்தம்


கும்பகோணம் அருகேயுள்ள திவ்யதேசம் ஒப்பிலியப்பன் கோவில். இங்குள்ள தீர்த்தம் அகோராத்ர புஷ்கரணி. எந்த தீர்த்தத்திலும் இரவில் நீராடுவது கூடாது. ஆனால், இப்பொய்கையில் இரவிலும் நீராடலாம் என்று விதிவிலக்கு உள்ளது. இதற்கு "பகலிராப் பொய்கை' என்று பெயர். தேவகர்மா என்னும் கந்தர்வன் முனிவர் ஒருவரின் சாபத்தால் கிரவுஞ்சபறவையாக பூலோகத்தில் வாழ்ந்து வந்தான். பலதலங்களுக்கும் சென்றும் சாபம் தீரவில்லை. ஒருமுறை ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வந்து ஒரு மரத்தில் தங்கினான். அன்றிரவு பெரும் புயல் வீசியது. பறவை அமர்ந்திருந்த மரக்கிளை முறிந்து பொய்கையில் விழுந்தது. அந்த தீர்த்தம் பறவை மீது பட்டதும் சாபம் நீங்கி, முந்தைய வடிவம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தான். இத்தலத்தில் பெருமாள் ஒப்பிலியப்பன் என்னும் திருநாமத்துடன் பட்டுபீதாம்பரதாரியாக, சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். பெருமாளும் தாயாரும் ஒரே சன்னதியில் சுத்தானந்த விமானத்தின் கீழ் வீற்றிருக்கின்றனர். இந்த விமானத்தை தரிசிப்பவர்கள் வாழ்வில் ஆனந்தம் பெறுவர் என்பது ஐதீகம். 

பொதுவாக மூலவருக்கும் உற்சவருக்கும் வேறுவேறு பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே பெயரால் அழைக்கப்படுகின்றனர். இங்கு பெருமாள், எந்த விழாவாயினும் பிராட்டியாரோடு சேர்ந்து புறப்படுவது வழக்கம். எட்டடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக காட்சிதரும் இப்பெருமாளை "ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், ஒப்பில்லா அப்பன்' என்று நம்மாழ்வார் வியந்து போற்றுகிறார். ஒப்பிலா அப்பன் என்ற பெயரே, பிற்காலத்தில் உப்பிலியப்பன் என்று திரிந்து விட்டது. இவருக்கு உப்பில்லாத நிவேதனமே படைக்கப்படுகிறது. திருமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாளைப் போல இவருக்கும் தனியாக சுப்ரபாதம் உண்டு.

No comments:

Post a Comment