Tuesday, 12 September 2017

சாம்பவி


சிவபெருமானின்  மனைவியான பார்வதிதேவிக்கு பல பெயர்கள் உண்டு. உமாதேவி என்பது பிரபலமான பெயர். இவளை "சங்கரி' என்றும் அழைப்பர்.  சிவனுக்கு சங்கரன் என்ற பெயரும் உண்டென்பதால் அவரது மனைவியான பார்வதியை "சங்கரி'  என்கிறோம். அவரை "சம்பு' என்றும் அழைப்பதுண்டு. எனவே, அவரது மனைவிக்கு "சாம்பவி' என்ற பெயர் வந்தது.  கரும்பு வில் முருகன் கரும்பு வில்லை  ஆயுதமாகக் கொண்டவன் யார் என்றால் "மன்மதன்' என்று பதில் சொல்வார்கள். ஆனால், இந்த ஆயுதத்தை வங்காளத்தில் முருகப் பெருமான் வைத்துள்ளார். இங்குள்ள விக்ரகங்கள் சிலவற்றில் முருகன் கரும்பு வில்லேந்தியிருப்பதைக் காண  முடிகிறது. படங்களிலும் இவ்வாறே வரைகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை முருகனுக்கு வேல் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. ஏனெனில், முருகன் போர்க்கோலம் பூண்டு சூரனை சம்ஹரித்த இடம் என்பதால், தன் அன்னையான சக்தியிடம் வேல் வாங்கிச் சென்றார். சக்திதேவியே  அந்த வேலில் சக்தியாக அமர்ந்தாள். எனவே இங்கு வேலுக்கு முக்கியத்துவம். தஞ்சாவூர் அருகிலுள்ள திருவையாறு ஐயாறப்பர் கோயில், முருகன் சன்னதியில் முருகன் வில்லுடன் காட்சியளிக்கிறார்.

முகுந்தனின் பொருள்

கிருஷ்ணபரமாத்மாவை "முகுந்தன்' என்று அழைக்கிறோம். "மு' என்றால் "முக்தியை அருள்வது' என்று பொருள். "கு' என்றால் "இவ்வுலக இன்பங்களை அருள்பவன்' என்று அர்த்தம். இந்தப் பெயரால் கிருஷ்ணனை வழிபட்டால் நன்மை இரட்டிப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுலக வாழ்வையும் சுகமாக்கி, அவ்வுலக வாழ்வையும் இன்பமாக்கக் காத்திருக்கிறது இந்த மந்திரச் சொல். எனவே அந்த கிருஷ்ணனை "முகுந்தா..முகுந்தா' என அழைத்து மகிழ்வோம்.

முக்தி மண்டப தலம்

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. ஆனால், அவர் சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பதைக் காண வேண்டுமானால், நாகபட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு அம்மனுக்கு "நீலாயதாட்சி' என்று பெயர். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசிவிசாலாட்சி என்பதோடு நாகை நீலாயதாட்சியையும் சேர்த்து சொல்வது வழக்கு. தேவாரம் பாடிய சுந்தரர், காயாரோகணேஸ்வரரின் அருள்பெற்று பொன்,பொருள், நவமணிகள், திருவாபரணங்கள், பட்டு, குதிரை, உடைவாள் ஆகிய அனைத்தும் பெற்றார். இங்கு ஐந்து முகவிநாயகருக்கு சன்னதி இருப்பது சிறப்பு. பொதுவாக ஐந்து முகவிநாயகரின் ஐந்து முகங்களும் வரிசையாகவே இருக்கும். ஆனால், இங்கு நான்குமுகங்கள் வரிசையாகவும், அதற்கு மேலே ஒருமுகமும் இருப்பது மாறுபாடான ஒன்றாகும். இவரை வழிபட்டால் தைரியம்  உண்டாகும். கயிலாயம், காசி போன்ற புண்ணியத்தலங்களை வழிபட்ட பலனைத்தரும் முக்திமண்டபம் இக்கோயிலில் உள்ளது. 

செப்புச்சிலைகளின்  முக்கியத்துவம்

கோயில்களில் உற்சவர் சிலைகளை விழாக்காலங்களில் சப்பரத்தில் எடுத்து வருவர். இவை பெரும்பாலும் செப்புச் சிலைகளாகவே இருக்கும். பஞ்சலோக சிலைகளில் கூட, செம்பே அதிகம் இருக்கும். மின்சாரத்தைப் பாய்ச்சும் திறன் படைத்த உலோகம் தாமிரம் என்னும் செம்பு.  கோயிலுக்கு வராத மக்களும் இறையருளை பெறவேண்டும் என்பதற்காக விழாக்காலங்களில் இறைவன் வீதியுலா வருவார். அப்போது இறைவனின் அருள் எங்கும் பாய வேண்டும் என்பதற்காகவே தாமிரத்தால் விக்ரகங்கள் செய்யப்பட்டன. 

No comments:

Post a Comment