Wednesday 1 November 2017

வெள்ளத்தில் வந்த சனிபகவான்!

v7

சனிசிங்கனாபூரில் சனிபகவான் கோயிலில் கோபுரம், சுற்றுச்சுவர் எதுவும் கிடையாது. மேடைமீது திறந்த தளத்தின் மத்தியில் சனிபகவான் விக்ரகம் உள்ளது. அந்த விக்ரகம் எல்லாக் கோயில்களிலும் உள்ள விக்ரகம் போன்று கிடையாது. எந்த வித உருவ அமைப்பும் செதுக்கப்படாத கருப்பு வண்ணக் கல்லாக காட்சி தருகின்றார். இவர் இங்கே சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறார். எந்தச் சிற்பியாலும் உளி கொண்டு செதுக்கப்படவில்லை. இவர் எப்படி இங்கே தோன்றினார் என்பதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. 

சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம், இந்தப்பகுதியில் அளவிடமுடியாத பெரிய அடைமழை பெய்தது.  இக்கிராமத்திற்குக் கிழக்கே உள்ள ஓடை ஒன்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அந்த வெள்ளத்தில் இந்த விக்ரகம் அடித்து வரப்பட்டு இக்கிராமத்திற்கு 100 மீ.தூரத்தில் கரை ஓரமாக ஒரு புதரில் சிக்கித் தங்கிவிட்டது. அடுத்த நாள் காலையில் ஆடுமேய்க்கும் சிறுவர்கள் இப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றனர். அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு பையன் விளையாட்டாகத் தன் தடியால் இவ்விக்ரகத்தை அடித்தான். அப்போது இக்கல்லிலிருந்து ரத்தம் வந்தது. சிறுவன் பயந்து ஓடிப்போய் ஊரிலுள்ள பெரியவர்களிடம் இதுபற்றிக் கூறினான். அவர்களில் சிலர் விக்ரகத்தில் காயம்பட்டு ரத்தம் வந்திருப்பதை கண்டு வியந்தனர். 

அன்று இரவு கிராமவாசி ஒருவரின் கனவில் சனிபகவான் தோன்றி அந்த விக்ரகம் தன்னுடையது என்றும் அதனை எடுத்து இந்தக் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறியது. அந்த கிராமவாசி மற்றவர்களிடம் தனது கனவுப்பற்றிக் கூற, அனைவரும் அதிசயப்பட்டு மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு சனிதேவன் இருக்குமிடம் நோக்கி பெரும் கூட்டமாகச் சென்றனர். அந்த மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்ற முயன்றனர். பலர் ஒன்று கூடி தூக்கியும் ஓர் அங்குலம்கூட நகர்த்த முடியாமல் ஏமாற்றமுடன் வீடு திரும்பினர். மீண்டும் அதே கிராமவாசியின் கனவில் அன்று இரவே தோன்றி தாய்மாமன் - மருமகன் முறையுள்ள உறவுக்காரர்கள் தம்மைத் தூக்கினால் தூக்க முடியும் என்றும் தர்ப்பைப்புல் போட்ட வண்டியில் கிராமத்திற்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் மேடை அமைத்து அதில் வைக்கும்படிக் கூறி மறைந்தார். 

அதன்படியே, அடுத்தநாள் மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தாளவாத்தியத்துடன் சென்று அவரை எடுத்து  வந்து வேப்பரமரத்தடியில் மூன்றடி உயர மண்மேடை மீது வைத்து வழிப்பட்டனர். 

சில நாள்கள் கழித்து நகரவாசி ஒருவர் மேடை அமைக்க முயற்சி செய்தார். சனி தேவனைத் தூக்கி வைத்துவிட்டு மேடை கட்ட முயற்சி செய்து போது அவரைத் தூக்க முடியாமல் வேலை தடைப்பட்டது. யாவரும் கவலைப் பட்டுக்கொண்டு இருக்கும்போது அதே பழைய கிராமவாசி கனவில் சனிதேவன் தோன்றி தாம் இருக்குமிடத்திலேயே தம்மை எடுக்காமல் அப்படியே சுற்றிலும் மேடை கட்டும்படி கூறினார்.  

அதன்படியே மேடை கட்டி முடிக்கவும் முதலில் இருந்த அளவு 5.9 அடி உயரமுள்ள உருவமாக தாமே சுயம்புவாக வளர்ந்து எப்போதும் போல மேடையில் காட்சி அருளினார். மக்கள் சனி மகாராஜ் என மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர். 

பல ஆண்டுகளாக வெயில், மழை, காற்று யாவற்றையும் தாங்கிக்கொண்டு வெட்ட வெளியில் சாமி இருப்பதைப் பொறுக்க மாட்டாத பக்தர்கள் சிலர் கோயிலும், மண்டபமும் கட்ட முயன்றனர். சனிதேவன் மக்கள் கனவில் தோன்றி தமக்கு எந்த விதத்திலும் கோயிலோ கூரையோ கட்டக்கூடாது எனக் கண்டிப்பாகக் கூறி விட்டாரம். அதுபோலவே இக்கிராம வீடுகளுக்கு கதவு நிலை வைக்கக்கூடாது எனவும் கூறி விட்டாராம். இன்றும் அப்பகுதியில் சில வீடுகள் பூட்டப்படுவது கிடையாது. 

சனிக்கிழமைச் செல்வம்: முன்னோரு காலத்தில் சிங்கனாபூரில் வாழ்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கு போதுமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் நால்வரும் உழைத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் மழை இல்லாத காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு சமயம் நிலத்தில் போதிய விளைச்சல் இல்லாததனால் குடும்பத்தில் உணவுத்தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிராமமக்கள் ஒன்று சேர்ந்து மழைவர சனிதேவனுக்கு மூங்கில் கழி விழா எடுத்தனர். நல்ல மழை பெய்தது. மழை ஒய்ந்ததும் ஒரு சனிக்கிழமை காலை அந்த விவசாயி தம் மக்களை அழைத்துக் கொண்டு முதல் மருமகளை மட்டும் வீட்டில் வேலைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு நிலத்திற்குச் சென்றுவிட்டார். 

மூத்த மருமகள் தானிய அறைக்குச் சென்று இருந்து தானியத்தை எடுத்து அரைத்து ரொட்டியும், குருமாவும் தயாரித்துக் கொண்டு இருந்தாள். அன்று மாத முதல் சனிக்கிழமை அன்று சனிதேவன் ஒரு வழிப்போக்கன் உருவில் அவ்வீட்டிற்கு வந்து எனது உடல் வலிக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, பசிக்கு ஏதாவது உணவு கொடுக்குமாறும் கேட்டார். முதல் மருமகள் வீட்டில் எதுவும் தானியம் இல்லை எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார். சனிதேவன் அவள் கூறியபடியே உணவு தானியம் இல்லாமல் போகச் சபித்துவிட்டுச் சென்றார். அவள் சமைத்த உணவும் தானிய அறையிலிருந்தவைகளும் மாயமாக மறைந்து விட்டன. பிறகு தான் புரிந்தது வந்து போனது சனிபகவான் என்று! அதன் தொடர்ச்சியாக எல்லோரும் அன்று சனிபகவான் எழுந்தருளி உள்ள மேடைக்குச் சென்று சனிபகவானுக்கு எண்ணெய்க் காப்பு செய்து உணவுப் பண்டங்கள், துணி மணிகள் வைத்தும் வழிபட்டனர். 


மூத்த மருமகள் தன் தவறுக்கு மன்னிக்க வேண்டி ஒரு உண்டியல் தயார் செய்து அதில் காசுகள் போட்டு மேடை அருகே கட்டி வைத்தாள். எல்லோரும் மன மகிழ்வுடன் அன்று இரவு தூங்கினர். அடுத்த நாள் இரவு விவசாயி கனவில் சனிதேவன் தோன்றி நம் மேடை அருகில் வைக்கப்பட்ட உண்டியலை அகற்றிவிடும் படியும் தமக்கு அளிக்கப்பட்ட துணிமணிகளை ஏழை மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு அன்னதானம் செய்யும்படி கூறி மறைந்தார். அது போலவே அவரும் செய்தார்.

எருக்கு இலை மாலைபோடும் அதிசயம்:  சிங்கனாபூரில் சனிபகவானுக்கு எருக்கு இலையை மாலையாகக் கட்டிப்போட்டு வழிபடுகின்றனர். நமது ஊர்ப்பக்கம் விநாயகருக்கு வெள்ளை எருக்கம் பூ மாலைப் போட்டு வழிபடுகின்றோம் என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோன்றே சனிப்பெயர்ச்சி அன்று அங்கே வழிபடுவது மிகவும் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.  

செல்லும் வழித்தடம்: சனிசிங்கனாபூருக்குத் துல்ஜாபூரிலிருந்து ஒரு பாதை உள்ளது. சீரடியிலிருந்து அகமத்நகர் வழியாகயும் ஒரு பாதையும் உண்டு. 

No comments:

Post a Comment