Wednesday 1 November 2017

விபரீத ராஜ யோகம் யாருக்கு

shukra

12 ராசிகளிலும் 9 கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளைப் பொறுத்தும், இணைந்திருக்கும் கிரகங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை தீமைகளும் நடக்கும்.

யோகங்கள் என்பது பல வகைப்படும். மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய  யோகம் இது. ஒரு ஜாதகத்தில் கெட்ட கிரகம் ஒன்று கெட்டுப்போய் இருந்தால் அது ராஜயோகமாக மாறிவிடும். நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

உதாரணத்துக்கு, கன்னியா லக்கின ஜாதகம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னியா லக்கினத்துக்கு, செவ்வாய் மூன்றாம் வீட்டுக்கும், எட்டாம் வீட்டுக்கும் அதிபதி. ஆகவே, அவர் கெட்டவர்.

அப்படிக் கெட்டவரான அவர், ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய மறைவு ஸ்தானங்களில், ஏதாவதில் ஒன்றில் இருந்தால், கெட்டுப்போய்விடுகிறார். அல்லது மறைந்துபோய்விடுகிறார். அப்படி மறைந்துபோன அவர், தன் தசா, புக்திக் காலங்களில், கெடுதல் செய்வதற்குப் பதிலாக நன்மையே செய்வார். ஏனென்றால், கெட்டவன் கெட்டுப்போய்விட்டார்.

அதேபோல், மீன லக்கினத்துக்கு, சுக்கிரன் மூன்றாம் வீட்டுக்கும், எட்டாம் வீட்டுக்கும் அதிபதி. அவர் கெட்டவன் ஆகிறார். அப்படிக் கெட்டவரான சுக்கிரன், மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் ஏதாவது ஒன்றில் மறைந்து இருந்தால், அவர் ராஜயோகத்தைக் கொடுப்பவராகிறார்.

சுக்கிரன் இயற்கையிலேயே சுப கிரகமாக இருந்தாலும், அவர் ஆதிபத்திய ரீதியாகக் கெட்டவர் ஆகிறார். ஆக, மீன லக்கினத்துக்கு சுக்கிரன் ஒரு பாப கிரகம். அவர், ஜாதகத்தில் கெட்டுப்போய் இருந்தால், ராஜயோகத்தைக் கொடுப்பவர் ஆகிறார். இதைத்தான்,  “கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் ராஜயோகம்” என்று ஜோதிடரீதியில் சொல்வார்கள்.

சனி தசை இருப்பு – வரு 11 - மா 5 - நாள் 6.

இவருக்கு சுக்கிர தசை நடந்துகொண்டிருந்தது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உரக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு, வியாபார நுணுக்கமெல்லாம் நன்றாகத் தெரியும். திடீரென ஒரு ஆசை தோன்றியது. நாம் சுயமாக வியாபாரம் செய்தால் என்ன? உடனே ஒரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் காண்பித்தார். அவர் ‘உங்களுக்கு சுக்கிர தசை நடந்துகொண்டு இருக்கிறது. அவர் மூன்று, எட்டு வீடுகளுக்கு அதிபதி. ஆறாம் வீட்டில் மறைந்துவிட்டார். ஆகவே, அவர் உங்களுக்கு ராஜ யோகத்தைக் கொடுப்பார். வியாபாரம் ஆரம்பித்துச் செய்யுங்கள்’ என தைரியம் கொடுத்தார்.

இவரும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடம் உதவிபெற்று வியாபாரத்தை ஆரம்பித்தார். சுமார் ஒன்றறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்தார். முடிவு. பல லட்சங்கள் நஷ்டம். நன்றாகப் புதைகுழியில் மாட்டிக்கொண்டார். வெளியே வர முடியவில்லை. இத்துடன் இவர் கதையை நிறுத்திக்கொள்வோம். ஜாதகரீதியாக, ஏன் இப்படி நடந்தது என்று பார்ப்போம்.

சுக்கிரன்,  தன்  சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருக்கிறார். ஆக, அவர் 6-ம் வீட்டுப் பலனைத்தான் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சுக்கிரன் மூன்றாம், எட்டாம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே, மூன்று, ஆறு, எட்டு வீடுகளின் பலனை அவர் கொடுத்துவிட்டார்.  எந்தக் கிரகமும், எந்த நட்சத்திரக் காலில் இருக்கிறார், அவர் யாரால் பார்க்கப்படுகிறார் என்பதை எல்லாம் பார்க்காமல் பலன் சொன்னால் இதுதான் நிலைமை.

இதைப்போல் பல ஜாதகங்களில், இந்த விபரீத ராஜயோகம், நன்மைக்குப் பதில் கெடுதலும் செய்துவிடும்.

No comments:

Post a Comment