பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது.
பழங்காலங்களில் ஒரு மனிதருடைய வாழ்வில், மூன்று முறை சங்கநாதம் ஒலிக்கப்பட்டது. அதன் மூலமாக எழக்கூடிய சுப நாதமானது, சம்பந்தப்பட்ட மனிதருக்கு நற்பலன்களை உண்டாக்குவதாக நம்பப்பட்டது. தற்போது நடைமுறையில் அவ்வளவாக இல்லாத அந்த பழக்கத்தில் பல்வேறு உள்ளர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் ஒலிக்கப்பட்ட மூன்று சங்கநாதங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
முதல் சங்கு :
‘முதற்சங்கம் அமுதூட்டும், நடுச்சங்கம் நல்வழி காட்டும், கடைச்சங்கம் காதவழிபோம்’ என்று நமது முன்னோர்களால் குறிப்பிடப்பட்டது. முதல் சங்கு என்பது ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒலிக்கப்படுவதோடு, முதன்முதலாக சங்கில் பாலூட்டுவதும் மரபாக இருந்து வந்தது. அதிலும் வலம்புரி சங்கு மூலம் பாலூட்டப் படும் ஆண் குழந்தை வீரமும், நன்னெறியும் கொண்டதாக வளருவதாக கருதப்பட்டது.
இரண்டாவது சங்கு :
இரண்டாவது சங்கு என்பது ஒருவரது திருமணத்தின்போது ஒலிக்கப்படும். அதாவது இரண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் சம்பிரதாய நெறிமுறையாக இருந்து வந்தது. காதில் சங்கை வைத்து கேட்டால் மட்டுமே ஓம்கார ஓசை கேட்கும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் அவரவர்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்பதன் வாயிலாக, பிரச்சினைகளை காதோடு காது வைத்ததுபோல சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது.
மூன்றாவது சங்கு:
இது ஒருவரது மரணத்தின் பின்பு ஒலிக்கப்படுவதாகும். இறந்தவர், இறைவனுக்கு சமமாக சொல்லப்பட்டது. இனம், மதம், உயர்வு, தாழ்வு, ஜாதி வேற்றுமைகள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரும் கூடும் இடங்கள் மூன்று உண்டு. அவை ஆலயம், பள்ளிக்கூடம், மயானம் ஆகியவை. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறுதியில் அனைவரும் ஒன்றுகூடும் மயான பூமிக்கு அவர் கொண்டுவரப் படும்போது, புனிதம் பெற்றவராக வரவேண்டும் என்ற கருத்தில் ஒலிக்கப்படுவது மூன்றாவது சங்கநாதம் ஆகும்.
No comments:
Post a Comment