சுமதி பெற்ற சிவலோக பதவி கதை பேரூர் புராணத்தில் ‘சுமதி கதிபெறு’ படலத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கதையை விரிவாக பார்க்கலாம்.
மகாராட்டிர தேசத்தில் எச்சதேவன் என்னும் அந்தணன், அரிய தவங்களும், வேள்விகளும் செய்து சிவனின் திருவருளால் ஒரு மகனைப் பெற்றான். அவனுக்கு சுமதி என்று பெயர் வைத்து, வேதங்கள் பல ஓதி ஒழுக்கத்தோடு வளர்த்து வந்தான். சுமதி வளர்ந்து பெரியவன் ஆனதும், மறையவன் மகள் சிவதாமா என்பவளை மணம் முடித்து வைத்தான். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தல யாத்திரை மேற்கொள்ள ஆசைப்பட்ட சுமதி, ஈசன் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தான். அங்கு மகோற்சவத்தை தரிசித்து, நகரை சுற்றி வர புறப்பட்டான். அப்போது கடும் வெயிலால் அவனுக்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீர் வேண்டி ஒரு பெரிய வீட்டின் முன்பு போய் நின்றான். அந்த வீட்டில் ஏமாங்கி என்ற பெண் இருந்தாள். அவள் பொருள் ஈட்டும் ஆசையில், தனது பதியாகிய கணவரைக் கொன்றவள். தற்போது பிற ஆண்களுடன் காம இச்சையை தீர்த்து மகா பாவம் செய்து கொண்டிருந்தாள்.
சுமதியின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த ஏமாங்கி, அவன் வசதியானவன் என்று தெரிந்ததும், பரிவு காட்டுவதுபோல் நடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தாள். தன்னுடைய ஊழ்வினையின் காரணமாக அவளது அழகில் மதி மயங்கினான், சுமதி. வந்த நோக்கத்தை மறந்து, ஏமாங்கியுடன் தங்கி, தன் கையில் இருந்த செல்வங்களை எல்லாம் இழந்தான்.
ஏமாங்கியுடன் இருப்பதற்கு மேலும் செல்வங்கள் தேவைப்பட, ஒரு நாள் கொடைக்கு பெயர் போன தேவன் என்பவனைக் கொன்று அவனிடம் இருந்த பொருளைப் பறித்துக் கொண்டு ஏமாங்கியிடம் வந்தான்.
இப்போது ஏமாங்கியிடம் பெரிய மாற்றம். ‘நல்லவனாக இருந்த ஒருவனை, நிச்சயமற்ற இந்த சரீரத்தின் எழிலால் மயக்கி, ஒரு கொலைகாரனாக மாறச் செய்து விட்டேனே’ என்று தன்னையே வெறுக்கத் தொடங்கினாள். ஒரு நாள் சுமதியிடம் சொல்லாமல், கண்காணாத இடத்திற்குச் சென்று விட்டாள் ஏமாங்கி. அவள் மீது உள்ள ஆசையால் கட்டுண்டு கிடந்த சுமதி, ஏமாங்கியைக் காணாது அதிர்ச்சியடைந்தான். அவளைத் தேடியபடியே தென்கயிலாயமாகிய திருப்பேரூர் எல்லையில் உள்ள காட்டிற்கு வந்தவன், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உடலை நாய், நரிகள் இழுத்துச் சென்று காஞ்சிமா நதியில் போட்டன.
சுமதியின் உடல் ஆதிபுரியில் விழுந்ததும், அது புண்ணிய நதியான காஞ்சிமா நதியில் பட்டதும், சுமதிக்கு சிவலோக பதியைப் பெற்றுத் தந்தது. இந்தக் கதை பேரூர் புராணத்தில் ‘சுமதி கதிபெறு’ படலத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment