திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பாகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் சமூக பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.
திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.
பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதை அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். திருமணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை திருமணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்தனர்.
திருமண வகைகள்
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஆண், பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன.
ஒரே தாரம்
ஒருதுணை திருமணம் என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. சில சமுதாயங்களில், ஒருவர் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும், ஒருவரை மட்டுமே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ கொண்டு வாழும் ஒருதுணை திருமணமுறை உள்ளது.
வேறு சில சமுதாயங்களில், எந்தவொரு காலகட்டத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டு வாழும் முறை உள்ளதாயினும், காலத்துக்குக் காலம் துணைவர்களை மாற்றிக்கொண்டு வாழ்வதையும் காணலாம். இது, கணவனோ, மனைவியோ இறந்து போவதனாலும், விவாகரத்தினாலும் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திருமணத் தொடர்புகளை ஒரு துணைவருடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும், இத்தகைய திமணமுறை தொடர் ஒருதுணை திருமணம் என அழைக்கப்படுகின்றது.
பலதார திருமணம்
ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் திருமண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி திருமணம் என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் என்றும் அழைக்கப்படும்.
உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை திருமணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி திருமணமேயாகும்.
பலகணவர் மணம் அல்லது "பல்கொழுநம்" என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் உறவு கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமயமலையை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்திலும் தென்னிந்தியாவில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது.
சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது.
இப்படி பலதரப்பட்ட திருமணங்கள் வழக்கில் உள்ள நிலையில் ஒருவர் எத்தனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதோ அல்லது பலதார திருமணங்கள் சரி அல்லது தவறு என்பதை விமர்சிப்பது நமது நோக்கம் அன்று. மாற்றாக ஒருவர் பலரை மணக்க ஜோதிட ரீதியான காரணங்களை அறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஜோதிட ரீதியாகப் பலதார திருமணங்கள்
பொதுவாக ஜாதகத்தில் திருமணத்தை குறிப்பிடுவது ஏழாமிடம் எனும் களத்திர ஸ்தானம் ஆகும். இந்தக் களத்திர ஸ்தானத்தின் அதிபதியைக் கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையைத் தீர்மானிக்கலாம் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். அதாவது ஒரு ஆண் அல்லது பெண் இணைந்து வாழும் தன்மையை கூறுவது ஏழாம் பாவமாகும்.
என்றாலும் ஒருவரின் குடும்ப வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் ஏழாம்பாவத்தினை மட்டும் கொண்டு அறியமுடியாது. எனவே, இரண்டாம் பாவத்தினை கொண்டும் குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் புதிய நபர் சேர்வது ஆகியவற்றைப் பற்றியும் கணவன் அல்லது மனைவியால் அடையும் சுகத்தை பதினோராம் பாவத்தைக் கொண்டும் அறியலாம் என்கிறது ஜோதிடம்.
ஒருவருடைய ஏழாம் பாவம் சுத்தமாக அதாவது கிரகங்கள் இன்றி இருப்பது நல்லது. ஏழாம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருப்பது திருமண வாழ்வில் பிரச்னையை ஏற்படுத்தும். இது திருமணத்தை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். மற்ற விஷயங்களுக்கு மாறுபடும்.
பலதார திருமணங்கள் நடைபெறும் ஜாதக அமைப்பு
1. ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் ஏழாம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது.
2. இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரகங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது.
3. ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது.
4. ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் திருமணத்தின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. பொதுவாகப் பல திருமணங்கள் செய்துகொண்டவர்களின் ஜாதகங்களைப் பார்க்கும்போது செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ஏழாம் பாவமாக அமைந்த ஜாதகங்களில் அதிக அளவு இந்த அமைப்பு காணப்படுகிறது.
5. ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி நின்றாலும் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.
6. ஏழாம் வீட்டில் ஒன்றிற்கு மேல் அசுப கிரகங்கள் நின்றாலும் பல தார அமைப்பை ஏற்படுத்துகிறது.
7. ஏழாம் வீட்டதிபதி உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் நிற்பது.
8. ஏழாம் வீட்டில் சந்திரன் நிற்பது, ஏழாம் வீட்டதிபதி பாப கர்த்தாரி யோகம் பெறுவது ஆகியவையும் பல தார திருமணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
9. சுக்கிரன் இரட்டை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த அதிபதி உச்சமானால் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.
இன்னும் எத்தனையோ விதிகள் இருந்தாலும் அனேகமாக இந்த விதிகளில் குறைந்தது இரண்டு விதிகள் இருந்தாலே அவர்களுக்கு பல தார யோகம் அமைந்துவிடுகிறது.
உதாரண ஜாதகங்கள்
1. இன்று பிறந்த நாள் காணும் அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகையான எலிசெபத் டெய்லர் எட்டு பேரை மணந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி அதன் இரண்டாமதிபதியான குரு உச்ச வீட்டில் நிற்பதும், ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்க்கை பெற்று நின்று உச்ச குருவின் பார்வை பெற்றது டெய்லருக்கு பல திருமண அமைப்பை தந்தது.
மேலும் குரு இருக்கும் வீட்டை வளர்ப்பார் என்பதும் ஜோதிட விதி. டெய்லரின் பாக்கிய ஸ்தானத்தில் நின்று களத்திர ஸ்தானாதிபதியை பார்த்தது அவருக்குப் பல திருமண பாக்கியங்களை ஏற்படுத்திவிட்டது.
2. காதல் மன்னன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு ஜெமினி கணேசன் மூன்று திருமணங்கள் செய்துக்கொண்டது அனைவரும் அறிவர்.
அவருடைய ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் சனி உச்சமாகி இரண்டு மற்றும் ஏழாம் பாவாதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டை பார்ப்பது அவருக்குப் பல திருமணங்களைத் தந்தது எனலாம். குரு சுக்கிர சேர்க்கை, சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆகியவை பல பெண்களை காதலிக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
3. இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்ப்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவரான கமலின் ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் பாதகாதிபதியாகிய சூரியன் நீசம் பெற்று சுகஸ்தானாதிபதி சனி உச்சம் பெற்று களத்திர ஸ்தானமான மேஷத்தை பார்ப்பதும், இரண்டு மற்றும் ஏழாமதிபதியாகிய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று களத்திர ஸ்தானத்தை பார்ப்பதும் பல திருமண தொடர்புகளை ஏற்படுத்தியது.
4. மூன்று பேரை மணந்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரான சஞ்ஜை தத்தின் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி களத்திர ஸ்தானத்தில் உச்ச சந்திரன் நின்று லக்னத்தை பார்ப்பதும் உச்ச சந்திரன் ராகுவின் திரிகோண பார்வையில் நிற்பதும் குடும்ப ஸ்தானதிபதி குரு பன்னிரண்டில் மறைந்ததும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையும் பல திருமணங்களை ஏற்படுத்திவிட்டது.
No comments:
Post a Comment