Monday, 26 February 2018

ருத்ராக்ஷம் அணிபவர்களா நீங்கள்? இதைக் கடைப்பிடிக்கின்றீர்களா?

rudraksha

ருத்ராக்ஷம் அணிபவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாபெரியவா அருமையான உபதேசம் ஒன்றை அளித்துள்ளார். 

பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று அருமையான தரிசனம் பெற்றார்.

அந்த உன்னதமான சிவ க்ஷேத்திரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.

பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பசுபதிநாத் பிரசாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் சமர்ப்பித்தார்.

பசுபதீஸ்வரரை நன்னா தரிசனம் பண்ணினியா?…

பெரியவா அனுக்கிரத்தில்… நன்னா தரிசனம் பண்ணினேன்..

கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்...

சரி இதை என்ன பண்ணப்போற?

பெரியவா அனுக்கிரகம் பண்ணிக் கொடுத்தேள்..ன்னா, கழுத்தில் போட்டுக்கலாம்னு.....இழுத்தார்

பெரியவா மௌனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…

அப்போ…நீ…இனிமே பொய் சொல்லாம இருப்பியா? என்று ஒரே தடாலடியாக கேட்டார்.

பக்தருக்கு துக்கிவாரிப் போட்டது!

ஆஹா! பெரியவா……இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!

இப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?

இல்ல.. பெரியவா…! சத்தியமா… என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாது..!.

ஏனோ …..?

ஏன்னா, நா… பொய் சொல்லாமல் சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. இப்படி எழுது…ன்னு எனக்கு மேல இருக்கின்ற ஆபிசர் உத்தரவு போட்டா… என்னால் மறுக்க முடியாது பெரியவா…

பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.

பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.

இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது…இந்த மாலையைக் குடு!

பக்தருக்கோ பரம சந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!

நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கிக் கொண்டார்.

ஆஹா! என் மனைவி சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம வீட்டில் இருக்கும் பெரியவாளின் படத்துக்குப் போட்டுவிடுங்கள்...என்று சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுள்ளார்…!

பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.

பொய்யே சொல்லாத ஒருவர்… நம் வீட்டுப் பூஜை அறையில் இருக்கின்றார் என்று எனக்கு இன்றைக்குத் தான் புரிந்தது...என்று மனைவியிடம் கூறி சந்தோஷப்பட்டடார். 

கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலையை அணிவித்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் சொந்தக்காரர் ஒருவர், பெரியவாளைத் தரிசனம் செய்ய வந்தார். 

உன்னுடைய சொந்தக்காரன், அதான்! அந்த வங்கியில் ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்சம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…

இந்த அருமையான அனுக்கிரக லீலையில், பெரியவா நாம் அனைவருக்கும் ஒரு உபதேசத்தை அளித்திருக்கிறார். ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளசி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்கியமாக இருக்கவேண்டியது… சத்யம்! இதுதான் பெரியவா திருவாக்கு!

No comments:

Post a Comment