Wednesday 28 February 2018

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நாளை மாசி மகத் தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நாளை மாசி மகத் தீர்த்தவாரி

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நாளை மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கோவில்நகரம் என்று போற்றப்படும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு மாசிமக திருவிழா மகாமக திருவிழாவில் தலைமை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி- அம்பாள் வீதியுலா நடந்தது.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று விநாயகர், சுவாமி - அம்பாள் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இன்று மாலை சண்டி கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி நாளை (1-ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் 7 சிவன் கோவில்கள், மற்றும் 5 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ சுவாமிகள் வீதியுலாவாக வந்து மகாமக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர்.

பின்னர் அஸ்திரதேவர் மூர்த்திகளுக்கு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனைத்து கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் வந்திருந்து மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். பின்னர் சுவாமி தரிசனம் செய்த பிறகு பொற்றாமரை குளம், காவிரி ஆறு மற்றும் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.

நாளை காலை 200-க்கும் மேற்பட்ட துறவியர்கள் பங்கேற்கும் ஆன்மீக கருத்தரங்கு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆன்மீக கலாச்சார ஊர்வலம், மாலை 6 மணிக்கு மகாமகக்குளக்கரையில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம், மற்றும் மகா ஆரத்தி ஆகியவை நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment