Sunday, 18 February 2018

காளியை நேரில் கண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்

காளியை நேரில் கண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்

காளிதேவியைக் கல்லுருவம் என்று கருதாது, உயிருடைய அன்னையாகவும் உலக மாதாவாகவும் எண்ணி வந்த ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை மூச்சு விடுவதைத் தான் உணர்ந்ததாகப் பல முறைகள் மொழிந்துள்ளார்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு முதல் குருவாக அமைந்தவர் கேனாராம் பட்டாச்சார்யர். 

இந்தக் குருவினால் சக்தி மந்திர தீட்சை செய்விக்க ஏற்பாடாகியது. அதற்குரிய சடங்குகள் முடிந்ததும், ஸ்ரீராமகிருஷ்ணரின் காதில் காளியின் மந்திரத்தைப் பட்டாச்சாரியார் ஓதினார். மந்திரத்தைக் கேட்டவுடனே ஸ்ரீராமகிருஷ்ணர் உடல் முழுவதும் புல்லரிக்க, அளவற்ற உணர்ச்சி வசப்பட்டு, ‘ஓ’ என்றுகத்தினார். பிறகு, தியானத்தில் மூழ்கி விட்டார். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், காளிதேவியே எல்லாம் என்ற எண்ணத்தோடு அதிகமாக வழிபடத் தொடங்கினார். பஞ்சவடிவில் தன்னை மறந்து, தியானத்தில் மூழ்கி, சாதனை பண்ணுவது வழக்கமாகி விட்டது. பாடல்களை மனம் உருகிப் பாடுவதும், அவருடைய சாதனைகளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக அமைந்தது. 

அன்னை காளியைக் காணாமல் துடித்தார். ‘அம்மா’ ‘அம்மா’ என்று கதறினார். கடைசியில் அன்னை காட்சி கொடுத்தாள். அதை அவரே கூறுகிறார். அதைக்கீழே காணலாம். 

‘‘அப்போது நான் காளியைக் காணாமல் நெஞ்சைப் பற்றி எரிக்கும் பயங்கர வேதனையால் துடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் இதயம் ஈரத்துணியைக் முறுக்கிப் பிழிவது போல வேதனையோடு இருந்தது. அளவற்ற ஏக்கத்தாலும் பரபரப்பாலும் நான் என் நிலையை மறந்து விட்டேன். ஒரு வேளை இந்தப் பிறவியில் நான் காளியைப் பார்க்க மாட்டேனோ? என்ற நினைவு தோன்றியது. அந்த நினைவு என்னுள் எழுந்ததும் என்னால் பொறுக்க முடியவில்லை. 

காளிகோவிலில் மாட்டப்பட்டிருந்த பலிகொடுக்கும் பெரிய வாளின் மேல் என் பார்வை விழுந்தது. காளியைக் காணமுடியாத இவ்வாழ்வு தேவையில்லை. இப்போதே முடித்து விடலாம் என்ற எண்ணம் மேலெழுந்தது. பைத்தியக்காரன் போல ஒரே தாவாகத் தாவி அந்தக் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு என் கழுத்தை வெட்டுவதற்காக ஓங்கினேன்.

உடனே, அன்னை எனக்குக் காட்சி தந்தாள். நான் மயங்கித் தரையில் சாய்ந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதும், அந்த நாளும், அடுத்த நாளும் எப்படிக் கழிந்தது என்பதும் எனக்கு நினைவே இல்லை. ஆனால், என்னுள் மாசு மறுவற்ற, கொஞ்சமும் குறையாத, இதுவரை நான் கண்டறியாத புத்தம் புதிய இன்ப வெள்ளம் ஓடிய படியே இருந்தது. அன்னையின் அந்தக் காட்சி என்னுள் எப்போதும் நிறைந்து நின்றது.’’ இங்குப் பகவான் காளியைக் காணச் சாந்த பாவத்தைப் பயன்படுத்தி காளியின் காட்சியைக் கண்டுக் களிக்கிறார். 

ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி தேவியின் முன் நின்று, பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார். இதைக்கண்ட சிலர், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்தார்கள். ஒரு சமயத்தில், பரமஹம்சர் தேவியிடத்தில், ‘‘தாயே! நின்னை வணங்கும் வகைகளையானறியேன். எந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமோ அவைகளைத் தெரிகிலேன். நின்னை அடையும் வழியைக் கண்டிலேன். நான் உன்னை எவ்விதம் அடையலாம் என்பதை நீயே எனக்குக் கற்பிக்க வேண்டும். இங்கு உன்னைத் தவிர எனக்கு யார் துணை புரிவார்’’ என்று பலவிதமாகத் தோத்தரித்து, பக்தியில் மூழ்கி விடுவார். 

ஸ்ரீராமகிருஷ்ணர் தேவியின் அழகிய திருவடிகளையோ, கைகளையோ, முகத்தையோதான் முன்பு பார்க்க நேரிட்டது. ஆனால், எப்பொழுது அவர் தன்னாலாவது ஒன்றுமில்லை உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் இயற்றும் சக்தி அந்த பராசக்தியிடமிருந்துதான் வெளிக்கிளம்புகிறது. அவள் தரிசனத்தைப் பெறாத ஒருவன் மானிடப் பிறப்பெடுத்த தன் பயனைப்பெறான் என்ற ஆழ்ந்த எண்ணங்கள் உண்டான பிறகு, அன்னையின் தேகம் முழுவதையும் தரிசித்தார். தாயார் தன்னுடன் பேசுவதைப் போலவும், தனது நித்திய கர்மானுஷ்டான வேலைகளை எந்த விதம் செய்ய வேண்டுமென்று போதிப்பதாகவும் ஸ்ரீராமகிருஷ்ணர் உணர்ந்தார்.

காளிதேவியைக் கல்லுருவம் என்று கருதாது, உயிருடைய அன்னையாகவும் உலக மாதாவாகவும் எண்ணி வந்த ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை மூச்சு விடுவதைத் தான் உணர்ந்ததாகப் பல முறைகள் மொழிந்துள்ளார். 

தேவியைப் பூஜை செய்யும் காலத்தில், ஸ்ரீராமகிருஷ்ணர் மலர்களையும், வில்வத்தையும் எடுத்து, தனது தலை, மார்பு, கால்கள் முதலியவைகளைத் தொட்டு பிறகு மனத் தூய்மையுடன் அன்னையின் பாதங்களில் சமர்ப்பித்தார். நிவேதனம் செய்யும் பொழுது அன்னத்தை எடுத்து, அன்னை அருமையான குழந்தைக்கு ஆகாரம் அளிப்பதைப் போல, தேவியின் வாயில் வைத்து அருந்தும் படியாகக் கெஞ்சுவார். சிறிது ஆகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தான் அருந்திவிட்டு மிகுதியைத் தேவிக்குக் கொடுப்பார். 

ராக்காலங்களில், ‘‘அன்னையே நீ தூங்குகிறாயா? நானும் இங்கு இருக்க வேண்டுமா, என்று சொல்லி சரி நான் இங்கு படுத்து உறங்குகிறேன். நீயும் உறங்குவாயாக’’ என்று சொல்லி விட்டு அன்னைக்கென அமைத்திருக்கும் கட்டிலில் படுத்துறங்குவார். 

ஸ்ரீராமகிருஷ்ணர் தேவியைப் பூஜை செய்யும் விநோத முறையைக் கண்ட, கோவிலில் பணிபுரிபவர்கள் மதுரநாதரிடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்றும், அவர் காளி தேவியின் இருப்பிடத்தை அசுத்தம் செய்துவிட்டதாகவும் முறையிட்டார்கள் 

அதைக் கேள்வியுற்ற மதுரநாதர், ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரது பூஜைகளை மறைவில் இருந்து பார்த்திருந்தார். அப்பொழுது, ஸ்ரீராமகிருஷ்ணரைப் போன்ற தூயமனமுடையவரையும், மெய் மறந்து பூஜை செய்பவரையும் இதற்கு முன்பு எங்குமே பார்த்திராததால், மதுரநாதர் அவரது பக்திக்கு வியந்து அவரது இஷ்டம் போல் தேவியைப் பூஜை செய்து வரலாமென்று உத்தரவிட்டார். 

கடவுளிடத்தில் பக்தி செலுத்தும் முறைகளில் முக்கியமானவை இரண்டு. அவை ஒன்று வைதீக பக்தி. அதாவது கடவுளை ஆசாரத்துடனும், மந்திரங்களுடனும், தீபங்களுடனும், நிவேதனங்களுடனும் ஆராதிப்பது. இரண்டாவது பிரேம பக்தி. அதாவது யாதொரு மந்திரமும் இல்லாமல், முறைகளில்லாமல் தனது மனத்தில் தோன்றிய விதம் கடவுளை ஆராதிப்பதாம். 

ஸ்ரீராமகிருஷ்ணர் காளி தேவியைப் பூஜித்து வந்தது இரண்டாவதாகக் கூறிய பிரேம பக்தியைச் சார்ந்ததாகும்.

No comments:

Post a Comment