சென்னை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கோயம்பேட்டிற்கு அருகில் உள்ளது சின்மையா நகர். இதற்கு அடுத்துள்ள நடேச நகரில் சிவ- விஷ்ணு ஆலயம் ஒன்று அமைந்திருக்கிறது. 1969-ம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வழிபடுவதற்காக பிரசன்ன விநாயகர் கோவிலை அமைத்தார்கள். இந்த ஆலயமே தற்போது விரிவாக்கம் அடைந்து, சிவ-விஷ்ணு ஆலயமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த கோவிலில் தர்மசவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் சன்னிதி, கல்யாண ராமர், அனுமன், தன்வந்தரி, ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் சன்னிதிகள் அமைந்துள்ளன. மேலும் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமான், பைரவர், துர்க்கை, ஐயப்பன், நவக்கிரக சன்னிதிகளும் இருக்கின்றன. சமீபத்தில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மார்கழிமாத வழிபாடு, தைப்பூசம், பிரதோஷம், ஹயக்ரீவர் ஹோமம், பைரவர் வழிபாடு, சண்டி ஹோமம், துர்க்கைக்கு ராகு கால பூஜை, சங்கடஹரசதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வைகுண்ட ஏகாதசி உள்பட அனைத்து விஷேச நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள், வீதி உலாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு வழிபாடுகளின்போது இசைக்கச்சேரி, இலக்கிய பேருரை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. மாணவர்கள் கல்வியில் - தேர்வில் வெற்றிவாகை சூட ஹயக்ரீவர் ஹோமங்களும் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் தற்போது பக்தர்கள் உதவியுடன் மூன்று நிலை கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment