Tuesday, 20 February 2018

போதையால் பாதை மாறிவிட்டீர்களா? கவலை வேண்டாம்! திருச்செந்தூர் முருகனை வணங்குங்க!

addiction1

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது மற்றும் போதை பழக்கம் மெல்ல மெல்ல பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்தப் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாது. உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் போதைப் பொருட்களினை உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பர். போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். 

இப்போது ஒன்றும் குடிமுழுகி போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து, செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக – சம்பாதிப்பது, சந்தோஷத்திற்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது. குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம். குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கும். குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன?. சுழலும் இந்த புயலில் சிக்கி துன்பப்படுபவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று பேதை பெண்களுக்கும்/ குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான்.

போதை பழக்கம் முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பீர் உடம்புக்கு நல்லது என சமாதானம் கூறிக்கொண்டு தான் இந்த பழக்கம் ஆரம்பிக்கும்.  ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.

போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அதற்குக் கூறும் காரணங்கள்

பெரும்பாலும் குடிப்பவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும். 

காதல் தோல்வி
குடும்பத்தில் பிரச்சினை
வேலையின்மை
குடிப்பது ஓர் நாகரீகம்
வெளிநாட்டு வாழ்க்கையில் தோன்றும் மன அழுத்தம்
கடன் சுமை
அதிக வேலையால் ஏற்படும் மன அழுத்தம் 

ஆனால் இவை எதுவும் உண்மை காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி அடுத்தவர் தன்னில் பரிதாபப்படும்படி காரணத்தைக் கூறி குடியைத் தொடர்வதற்காக கூறப்படும் ஒரு காரணங்கள் இவை.

பார்ட்டிகளில் குடித்தால் நாகரீகம் என்று சொல்லி குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பது, பின்னர் அவர்களில் பலருக்கு அதுவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.

சில பேருக்கு ஏற்படும் சூழ்நிலைகள் காரணமாக இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். மேலும் இந்தப் போதை வஸ்துக்கள் மிகவும் எளிதாகக் கிடைப்பதும் ஒரு காரணம். நண்பர்களின் வற்புறுத்தல், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இதில் என்ன இருக்கின்றது என்கின்ற எண்ணம் போன்றவற்றினால் இப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

சிலர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க சரியான வழி தெரியாமல், அதிலிருந்து தற்காலிகமாக விடுபட, மயக்க நிலையை அடைய வைக்கின்ற இந்த போதைப் பழக்கத்தினை நாடுகின்றனர்.

மனப்பதற்றம், மன அழுத்தம் உடையவர்கள், தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் கூட இந்த மதுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். வருடக்கணக்கில் சில பேர் அளவுக்கதிகமாக குடிப்பர், அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதனால் நமக்கும் ஒன்றும் செய்யாது எனத் தவறாக நினைத்த குடிப்பழக்கத்தினை தொடர்கின்றனர்.

ஜோதிடத்தில் குடி மற்றும் போதை பழக்கத்திற்கான கிரகநிலை

குடி மற்றும் போதை பழக்கத்திற்கான காரக வீடு கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடான மீனம் மற்றும் ஜெனன ஜாதக பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். மேலும் குடிப்பழக்கத்திற்கு காரக கிரகம் செவ்வாய் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

மூளையின் காரகராக விளங்கும் புதனும் குடி மற்றும் போதை பழக்கத்திற்கு முக்கிய காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம். ஓருவர் ஜாதகத்தில் புதன் 6/8/12 தொடர்பு பெற்று நின்றாலோ, ராகு கேது சேர்க்கை பெற்றாலோ, புதன் வக்ரம் மற்றும் நீசம் அடைந்தாலோ புத்தி மந்தம் ஏற்படுகிறது. 

நீச சந்திரனுடன் கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் புதன் சேர்க்கை பெற்றால் அவர்களுக்கு தையாமின் எனும் விட்டமின் குறைவால் குடி பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.  

குருவின் பார்வையோ சேரிக்கையோ இன்றி செவ்வாய் கால புருஷனுக்கு பன்னிரெண்டான் மீனத்திலோ அல்லது ஜாதக பன்னிரெண்டில் நிற்பது, செவ்வாயும் சந்திரனும் நீர் ராசியில் சேர்க்கை பெற்று நிற்பது. பலமிழந்த சூரியனோ அல்லது சந்திரனோ நீர் ராசியில் நிற்பது அல்லது நெருப்பு ராசியில் மாறி மாறி  நிற்பது. முக்கியமாக விருச்சிகத்தில் நிற்பது. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நிற்கும் கிரஹங்கள் விடமுடியாத பழக்கத்தை கூறும். எந்த லக்னமாக இருந்தாலும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சியாகிவிட்டால் மதுப்பழக்கம் கட்டாயம் இருக்கும். 

விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி நின்று அதை செவ்வாய் ரிஷபத்தில் நின்று பார்த்துவிட்டால் தீவிர குடிப்பழக்கம் ஏற்படும். விருச்சிகத்தில் ராகு சந்திரனோடு சேர்ந்து நின்று அதை செவ்வாயும் கேதுவும் பார்த்தாலும் விருச்சிகத்தில் ராகுவோடு செவ்வாய் சேர்ந்து நின்று உச்ச சந்திரனும் கேதுவும் பார்த்தாலும் அவர்கள் சாதா தண்ணீரை எல்லாம் பருக மாட்டார்கள். இருபத்துநான்கு மணி நேரமும் சுண்ட "காய்ச்சிய" தண்ணீரைத்தான் குடிப்பார்கள்.

மேற்கண்ட கிரஹ நிலையோடு விருச்சிகத்தில் கேது அல்லது சனி மற்றும் மாந்தி நின்றுவிட்டால் அவர்கள் கள்ளு, சுண்டகஞ்சி முதலிய விலை குறைந்த வஸ்துக்களையும் விட மாட்டார்கள்.

மேஷம் மற்றும் கன்னி ராசியை லக்னமாக கொண்டு விருச்சிக ராசி எட்டாமிடமாகவோ அல்லது எட்டுக்கு எட்டான மூன்றாகவோ அமைந்து அங்கு சுக்கிரன், நீச சந்திரனுடன் சேர்ந்த ராகு அல்லது கேது மற்றும் செவ்வாய், சனி போன்ற கிரஹங்கள் நின்றுவிட்டால் பெருங்குடிகாரர்களாகவோ போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாகவோ இருப்பார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

பொதுவாகவே ஜல ராசியான கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் "ஜல" கண்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் ராசிகள் ஆகும். இதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய் இவற்றின் சேர்க்கை வக்ரம் பெற்ற குருவுடன் சேர்ந்துவிட்டால் பெருங்குடிமகன்களாக திகழ்வார்கள்.

மீனத்தில் உச்சமான சுக்கிரனுடன் குரு பார்வை சேர்க்கை இன்றி செவ்வாய்-சந்திரன், செவ்வாய் ராகு, செவ்வாய்-கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குத் தீவிர குடிப்பழக்கம் இருக்கும். சுக்கிர சேர்க்கையால் சொகுசாக ஏசி பார்களில் உயர்ந்த வகை மது அருந்துவதை விரும்புவார்கள்.

மேற்கத்திய ஜோதிடத்தில் குடிப்பழக்கத்திற்கு காரக கிரஹமாக நெப்ட்யூனை குறிப்பிடுகின்றனர். ஒருவரது ஜாதகத்தில் நெப்ட்யூன் மீனத்திலோ அல்லது பன்னிரெண்டாம் வீட்டிலோ நின்றால் குடிப்பழக்கத்திற்கு ஆளாவர் என்கின்றனர். மேலும் புளுட்டோவின் சேர்க்கையும் குடிப்பழக்கத்தை தெரிவிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

குடிப்பழக்கத்தை நிறுத்தும் எளியப் பரிகாரங்கள்

1. குடிப்பழக்கத்தை நிறுத்த குருவின் அருள் மிகவும் முக்கியமானதாகும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் குருஸ்தலங்களுக்கு வியாழக்கிழமைகளில் செல்வது சிறந்த பலனளிக்கும்.

2. குடிப்பழக்கத்திற்கான முக்கிய கிரகமாக செவ்வாய் விளங்குவதால் குரு மற்றும் செவ்வாய் இருவருக்கும் சேர்ந்து ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் சென்றுவருவது குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.

3. கர்மவினையின் காரணமாகவே குடிப்பழக்கம் ஏற்படுகிறது. கர்மவினையை தீர்ப்பதில் சித்தர்களின் பங்கு விவரிக்கலாததாகும். எனவே வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதிகளில் வழிபடுவது சிறந்த பயனளிக்கும் பரிகாரமாகும்.

4. குடிப்பழக்கம் என்பது பஞ்சபூதங்களில் ஜலத்தினால் ஏற்படும் ஒரு தோஷமாகும். எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் நீரினை குறிக்கும் திருச்சி திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுரை ஜம்புகேஸ்வரரை திங்கள் கிழமைகளில் வணங்கிவரக் குடிப்பழக்கம் அறவே நீங்கும்.

5. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் புதனின் காரகம் பெற்ற தையாமின் எனும் விட்டமின் அளவை பரிசோதித்து மருத்துவர் ஆலோசனையுடன் தையாமின் உட்கொள்ள ஆரம்பித்தால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

போதை பழக்கத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மனதளவில் தளர்ச்சி அடைதல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுதல் மூலமாக மன அழுத்தம் ஏற்பட்டு உடலையும், மனதினையும் பாதிக்கிறது.

போதை பழக்கம் வராமல் தடுக்கவும், குடிக்கின்ற எண்ணங்கள் வராமல் இருக்கவும் சில மருந்துகள் உள்ளன. இந்த வகையான மருந்துகளை எடுத்த பின்பு குடித்தாலும் வாந்தி, குமட்டல் போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளன. இவற்றினை நோயாளிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ டீ,காபி போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம். என்னதான் சிகிச்சை முறைகள் இருந்தாலும் அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.

அடுத்தவர் பேச்சை கேட்டுக் குடிக்காதீர்கள், குடிப்பவராக இருந்தால் இனியாவது குடியை நிறுத்துங்கள். சிறிதளவில் குடிப்பவர் தனது குடியை உடனடியாக நிறுத்த முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரே நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்குப் பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பைத் தரும். எனவே குறைத்து குறைத்துக் கொண்டு வந்து நிறுத்துவது நல்லது.

No comments:

Post a Comment