அரிய, பயனுள்ள சில முக்கியமான ஆன்மிக வழிபாட்டு தகவல்களை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் வருடங்கள் :
நவக்கிரகங்களில் குரு என்னும் வியாழன், ஒரு முறை வான வட்டத்தை முழுமையாகச் சுற்றி வர, பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன. அதுவே சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவைப்படுகிறது. மேற்படி இரண்டு கிரகங்களும் எப்போது அசுவதி நட்சத்திரத்தில் சந்திக்கின்றனவோ, அதுவே தமிழ் வருடப் பிறப்புகளில் முதலாவது வருடமான ‘பிரபவ’ வருடம் ஆகும். அதனைத் தொடர்ந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சுவாமிமலை முருகப்பெருமான் கோவில் படிக்கட்டுகள், புதுக்கோட்டையில் உள்ள குமரமலை ஆலய படிக் கட்டுகள் மற்றும் விராலிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள் ஆகியவை, தமிழ் வருடங்கள் அறுபதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நலம் தரும் வழிபாடு :
அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய 7 சிரஞ்சீவிகளையும், அருந்ததி, அனுசுயா, சாவித்ரி, ஜானகி, சதிதேவி என்ற தாட்சாயிணி ஆகிய 5 கற்புக்கரசிகளையும் காலையில் எழுந்ததும் வணங்கும் ஆண்கள், பெண்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பதவி தரும் முருகன் :
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் என்ற இடத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், தலையில் தொப்பி அணிந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரை செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ச்சியாக 9 வாரங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், உயர் பதவிகள் கிடைக்கும் என்கிறார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமாம்.
தீமை அகற்றும் திருநீறு :
ஞானம் என்ற நெருப்பில் வினைகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின், எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விளக்கும் பொருளே வெண்ணீறு என்னும் திருநீறு ஆகும். அதாவது நம் உடலில், எண்ணத்தில் உள்ள துரு நீரை (தீய சக்திகள்) அகற்றுவது, தன்னை தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்குவது என்பதால் தான் அந்த திருநீற்றை, ‘விபூதி’ என்று அழைக்கிறார்கள்.
அமிர்த கலசத்துடன் ஐயப்பன் :
கேரளாவில் உள்ள சபரிமலை தான் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே பிரசித்தி பெற்றது. அந்த ஐயப்பன், கேரளாவின் குளப்புள்ளி என்ற இடத்தில் கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தருகிறார். ஆயுள் விருத்திக்கும், செல்வச் செழிப்புக்கும் இவரிடம் வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள், இங்குள்ள பக்தர்கள். பாலக்காட்டில் இருந்து 47 கிலோமீட்டர் தூரத்திலும், குருவாயூரில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் குளப்புள்ளி ஐயப்பன் சுவாமி ஆலயம் அமைந்திருக்கிறது.
சுக்கு வெல்ல நைவேத்தியம் :
ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாளுக்கு, தினமும் படைக்கப்படும் நைவேத்தியத்துடன் சுக்கு, வெல்லம் கலந்த கலவையை படைக்கின்றனர். இதை தன்வந்திரி பகவானே, பெருமாளுக்குப் படைப்பதாக ஐதீகம்.
கனவு ஆஞ்சநேயர் :
சென்னை சவுகார்பேட்டையில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்கு சிவன் சன்னிதிக்கு முன்பாக வலது புறத்தில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு வெள்ளி நிறத்தினாலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால், தீய கனவுகள் விலகி ஓடும், நல்ல கனவுகள் பலிக்கும் என்கிறார்கள். எனவே இவரை ‘கனவு ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள்.
அரூபமாக நவக்கிரகங்கள் :
திருப்பைஞ்ஞீலி நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஒரு கல்லில் ஒன்பது குழிகள் காணப்படுகின்றன. இந்த 9 குழிகளையும் 9 நவக்கிரகங்களாக எண்ணி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதை அரூப வழிபாடு என்று கூறுகிறார்கள். இதே வழிபாட்டு முறை திருமழப்பாடியில் உண்டு. இங்கே நவக்கிரகங்கள் மூன்று குழிகள் வடிவமாக இருப்பதாக ஐதீகம்.
மூச்சுப் பிடிப்பு அம்மன் :
திருச்சுழியில் உள்ள திருமேனிநாத் ஆலயத்தில் மூச்சுப் பிடிப்பு அம்மன் பிரசித்திப் பெற்றவராக திகழ்கிறார். இந்த அம்மன், அம்பாள் சன்னிதி கொடிமரத்தின் அருகில் உள்ள தூண் ஒன்றில் இருக்கிறார். மூச்சுப்பிடிப்பு நோயால் சிரமப்படும் பக்தர்கள் பலரும், இந்த அம்பாளுக்கு நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து பூசி வழிபடுகிறார்கள்.
No comments:
Post a Comment