Sunday 4 March 2018

இறந்தவர் உயிரை மீட்ட மவுன சாமி

இறந்தவர் உயிரை மீட்ட மவுன சாமி

மவுன சாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். இன்று மவுன சாமியாரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மவுன சாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் ஒன்று, ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இருந்தது. சென்னையில் ஒரு பக்தர் வீட்டிலும், அம்பாசமுத்திரம் மாவட்ட முனிசீப் வீட்டிலும், குற்றாலத்தில் தனது மடத்தில் தபால்காரரிடம் கையெழுத்திட்டு தபால் பெற்றும், மூன்று இடத்தில் இருந்து அபூர்வக் காட்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

1912-ம் ஆண்டு குற்றால மலையில் தனது பக்தர்களுடன் ஏறிய அவர், மலை முகட்டில் தெற்கு நோக்கி அமர்ந்து தவமிருந்தார். பக்தர்கள் அனைவரையும் சைகையால் அமரச் செய்தார். அதன்படியே அங்கு அமர்ந்து கண்ணை மூடியவர்களுக்கு, கன்னியாகுமரியில் நடந்த கோவில் திருவிழா தெரிந்தது. அவர்கள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, கோவில் பிரசாதம் அவர்கள் கைகளில் இருந்தது.

இருந்த இடத்தில் இருந்தே கன்னியாகுமரி கோவில் திருவிழவை காணச் செய்ததும், அந்தக் கோவில் பிரசாதத்தைத் தங்களுக்குக் கிடைக்கச் செய்ததும், குருவின் மீது சீடர்களுக்கு இருந்த பக்தியையும்,மரியாதையையும் கூட்டியது.

சென்னையில் ஒரு தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மவுன சாமியைச் சந்தித்துக் கூறினர். அவர்களின் வீட்டிற்குச் சென்று பூஜை செய்தார் மவுன சாமிகள். பிரசாதம் கொடுக்கும் போது, உள்ளே கிருஷ்ணன் விக்ரகம் இருந்தது. ‘இது தான் குற்றால சந்தான கோபாலன். உங்களுக்கு குழந்தைவரம் கிடைத்துவிட்டது’ என்று அருளாசியளித்தார். அதுபோலவே ஒரு வருடத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஒரு முறை குற்றால ஆசிரமத்தில் நடந்த விழாவில், இனிப்புகள் தயார் செய்ய நெய் வரவில்லை. அப்போது அங்கிருந்த 2 டின் மண்ணெண்ணெயை, சுவாமி மூலிகை பிழிந்து நெய்யாக மாற்றினார். அதன் பின் இனிப்புகள் செய்து விருந்து படைக்கப்பட்டது.

1916-ல் பத்ராசலம் ராஜா, மவுன சுவாமிகளுக்கு ஒரு புலித்தோலைக் கொடுத்தார். அந்த தோல் தற்போதும் குற்றால மடத்தில் உள்ளது. 1921-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சாத்தூர் ஜமீன்தார் சுவாமியை பார்க்க வந்தார். தங்களுக்கு வாரிசு இல்லையே என ஏங்கி வரம் கேட்டார். உடனே சாமி, ‘உங்கள் ஜமீன் எல்லைக்குள் குமாரசாமி கோவில் ஒன்று தரைக்குள் புதைந்து கிடக்கிறது. அதை புனர மைப்பு செய்து வணங்குகள்' என்றார்.

‘அப்படி எதுவுமே எங்கள் முன்னோர்கள் கூறவில்லையே’ என்று ஜமீன்தார் திகைத்தார்.

மவுன சாமி புன்முறுவலுடன் கர்நாடக மாநிலம் சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டச்சொன்னார். அங்கு ஒரு கோவிலே புதைந்து கிடந்தது. அதை தோண்டி கும்பாபிஷேகம் செய்தபின்னர், ஜமீன்தாருக்கு வாரிசு கிடைத்தது.

ஒருமுறை மவுன சுவாமிகளை, இளமை தோற்றத்தில் துறவியாக பார்க்க வேண்டும் என்று, அவரது பக்தர்கள் நினைத்தார்கள். உடனே சுவாமிகள், ‘என்னை புகைப்படம் எடுங்கள். அதில் என்னுடைய இளமை தோற்றம் தெரியும்’ என்றார். அதைப் போலவே எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முதுமை மறைந்து இளமைத் தோற்றமே பதிவாகியிருந்தது.

சென்னை கவர்னர் லார்ட் பெண்டலன்ட் என்பவர் குற்றாலம் வந்த போது, மரியாதை நிமித்தம் மவுன சாமியை சந்தித்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த மவுனசாமிகள் ஒரு கூடையில் ஆப்பிள் பழங்களையும், இரண்டு பெரிய ரோஜா மாலையையும் கவர்னருக்கு பரிசாக அளித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏனென்றால் கவர்னர் வருவது குறித்து மவுனசாமியிடம் யாரும் தகவலும் தெரிவிக்க வில்லை. உடனே ஆப்பிள் பழமும், ரோஜா மாலையும் கிடைக்கவும் வாய்ப்பில்லை. அப்படியிருக்க எப்படி பரிசளித்தார் என அனைவரும் திகைத்து நின்றனர். அவர் தனது சித்து மூலம் உருவாக்கியதுதான் ஆப்பிளும், ரோஜா மாலையும்.

மெலோனி என்ற ஆங்கில அதிகாரி தன் மனைவியுடன் மடத்துக்கு வந்த போது, ‘நாடிக் கணபதியை போலவே தனக்கு ஒரு சிறிய கணபதி வேண்டும்’ என்று கேட்டார். உடனே மவுனசாமி தனது தவ வலிமையால் அடுத்த நிமிடத்தில் கணபதியை வரவழைத்துக் கொடுத்தார்.

ஒரு முறை ஆசிரமத்தில் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. பணியைச் செய்த மேஸ்திரி மவுன சாமியிடம் போய் சம்பளம் கேட்டார். ‘அதோ அந்த மரத்தினை தோண்டி பார்’ என்றார்.

அங்கேச் சென்று தோண்டினால், கூலிக்கு தக்க பணம் இருந்தது. கோவிலை கட்டி முடிக்கும் வரை மரத்தின் அடியில் இருந்து தான் தன்னுடைய கூலிப் பணத்தை அந்த மேஸ்திரி பெற்றுக்கொண்டார்.

மிருகங்களை தனது கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டவர் மவுனசாமி. ஒருசமயம் குற்றால மலையில் சாது ஒருவரோடு மவுனசாமி சென்று கொண்டிருந்தார். உடன் சென்றவர் மீது புலி ஒன்று பாய்ந்தது. மவுன சாமி தவ வலிமையால் புலியை விரட்டினார்.

அவர் செய்த அற்புதங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இறந்தவர் ஒருவரின் உயிரை மீட்டெடுத்தார்.

ஒரு முறை பொறியாளர் ராமசாமி என்பவர் திடீர் மரணமடைந்தார். இந்த திடீர் மரணத்தால் அவரது குடும்பம் நிலைகுலைந்தது. அவர்கள் அனைவரும் மவுன சாமியிடம் வந்து கதறி கண்ணீர் வடித்தனர்.

மவுனசாமி மத்திரங்கள் கூறிய படி, இறந்தவரின் உடல் அருகே அமர்ந்தார். விபூதியை அந்த உடல் முழுவதும் தடவினார். பின் தனது கட்டை விரலை, இறந்தவர் நெற்றியில் வைத்து அழுத்தினார். ஏதோ மயக்கத்தில் இருந்து எழுந்ததுபோல், உயிருடன் எழுந்தார், இறந்தவர். உறவினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஆனால் அந்த நபரை பிழைக்க வைத்ததால் மவுன சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டார். தியானம் மூலம் தன்னுடைய உடல்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இறந்தவரை உயிர் பிழைக்க வைக்க அரிய சித்தியையும் செய்து காட்டியவர் மவுன சுவாமிகள்.

ஒரு முறை சுந்தரம் என்பவருடன், சதுரகிரிமலைக்கு பவுர்ணமி நாள் ஒன்றில் சென்றார் மவுன சாமிகள். அங்கு இரவில் திடீரென்று மவுன சாமி காணாமல் போய்விட்டார். உடன் சென்ற சுந்தரம் செய்வதறியாது திகைத்தார். அதிகாலையில் திரும்பி வந்த மவுன சாமியின் கையில் ஒரு தண்டம் இருந்தது. தான் இரவு முழுவதும் ஒரு சித்தரோடு மலை உச்சியில் அமர்ந்ததாகவும், அவர் தனக்கு நோய்தீர்க்கும் இந்த தண்டத்தை அளித்ததாகவும் கூறினார்.

மவுன சுவாமிகள் அடிக்கடி இரும்பை தங்கமாக்குகிறார். எனவே மடத்தில் நிறைய தங்கம் இருக்கும் என எண்ணிய கொள்ளை கும்பல் ஒன்று மடத்துக்குள் கொள்ளையடிக்க வந்தனர். அவர்கள் சுவர் ஏறி குதிக்கும் போதே, சுவரோடு ஒட்டிக்கொண்டனர். எங்களை காப்பாற்றுங்கள் எனக்குரல் கூக்குரல் இட்டனர். யாரும் காப்பாற்றவில்லை. காலையில் மவுனசாமி அவர்களை மன்னித்து விடுவித்தார்.

1943-ல் சுவாமிகள் சமாதி நிலை அடைய முடிவு செய்தார். 28.12.1943 அதிகாலை 2.15 மணிக்கு தன் உடலில் இருந்து உயிரை பிரித்துக்கொண்டார். அவரது உடலை மடத்துக்குள் அடக்கம் செய்தனர். அப்போது அவர் உடலில் இருந்து ஒளியாய் தோன்றி அங்கு நின்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

தற்போதும் இந்த மகாயோகி பக்தர்களுக்கு அனுக்கிரகம் தந்துகொண்டே இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

13.7.1951-ல் மவுன சுவாமியின் சமாதி மீது வாரணாசியிலிருந்து திரிவிக்ரம ராமானந்த பாரதி சுவாமிகளால் கொண்டுவரப்பட்ட நீலகண்டேஸ்வரர் என்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆச்சரியம் மிகுந்த மவுனசாமிகள் மடத்துக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment