Friday 2 March 2018

எங்கும் நிறைந்த கண்ணன்


கிருஷ்ணருக்கு பட்ட மகிஷிகள் எட்டு பேர். நரகாசுர வதம் முடிந்தபின், அவனால் சிறை பிடிக்கப்பட்ட 16 ஆயிரம் பெண்கள் கிருஷ்ணரை மணந்தனர். நாரதருக்கு இதில் சந்தேகம் உண்டானது. கிருஷ்ணர் எப்படி இத்தனை பெண்களைச் சமாளிக்கிறார் என்று! இதைப் பார்த்து விடவேண்டும் என்று துவாரகைக்கு கிளம்பினார். 

ருக்மிணியின் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு ருக்மிணி, கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள். கிருஷ்ணர் நாரதரிடம்,“நாரதா! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

“தங்கள் திவ்யமான திருப்பாதங்களை சரணடைந்தவர்களுக்கு வேறென்னவேண்டும். உங்கள் பாத தரிசனமே போதும்,” என்றார்.
கிருஷ்ணர் அவருக்கு ஆசியளித்தார்.

நாரதர் தன் ஐயத்தை கிருஷ்ணரிடம் கேட்காமல் மனதிலேயே வைத்துக் கொண்டு, மற்றொரு மாளிகைக்குப் புறப்பட்டார். அங்கு கிருஷ்ணர் உத்தவர் என்பவருடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார். நாரதரைக் கண்ட கிருஷ்ணர், “நாரதா! நலம் தானே!” என்று குசலம் விசாரித்தார். 

“உம் அருளால் பரம சவுக்கியம்,” என்று பதிலளித்து விட்டு கிளம்பினார். இன்னொரு வீட்டில் கிருஷ்ணர், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் பகவான் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார். 

அடுத்த வீட்டில் ஹோமாக்கினி செய்து கொண்டும், ஒரு வீட்டில் நீராடிக்கொண்டும், மற்றொரு வீட்டில் அந்தணர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டும் இருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சரியப்பட்டார்.

வீடுகள் தோறும் கிருஷ்ணரைக் கண்ட நாரதர், “கிருஷ்ணா! உன் மாய சக்தியை நேரில் அறிந்து கொண்டேன். எங்கும் கிருஷ்ணமயமாக இருப்பதைக் கண்டேன். யோகேஸ்வரா! இனி உமது லீலாவிநோதங்கள் பற்றி சிந்தித்துக் கொண்டே, திரிலோகங்களிலும் உலாவப் போகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்,” என்று விடைபெற்றார்.

No comments:

Post a Comment