யானை ஆற்றில் குளித்துவிட்டு, மறுகரைக்கு செல்லத் தயாரானது. மறுகரையில் பன்றி ஒன்று சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தது. சுத்தமாக இருக்கும் யானையைக் கண்ட பன்றிக்கு பொறாமை உண்டானது. யானையைச் சீண்டிப் பார்க்க முடிவெடுத்தது.ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலம் மிகவும் குறுகியது. அதன் வழியாக யானையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. யானை பாலத்திற்குள் நுழைந்து நடுப்பகுதிக்கு வந்து விட்டது. பன்றி உடனே யானையை நோக்கி ஓடியது. ஒடுக்கமான பாலம் என்பதால், எப்படியும் தன் உடம்பில் இருக்கும் சேற்றினை யானை மீது தற்செயலாக மோதுவது போல பூசிவிடலாம் என கணக்குப் போட்டது. சுதாரித்துக் கொண்ட யானையோ, சுவர் ஓரமாக நன்றாக ஒதுங்கி நின்று பன்றிக்கு வழிவிட்டது. பன்றி ஏமாந்து போனது. இனியும் வம்புக்குப் போனால் ஆபத்தாகி விடுமென பயந்து அப்படியே சென்று விட்டது. மறுகரையில் நின்ற தன் நண்பனான மற்றொரு பன்றியிடம் ""நண்பா! பார்த்தாயா! பயந்தாங்கொள்ளி யானை! கோயில் பிரசாதம் சாப்பிட்டு கொழுத்து இருப்பது தான் மிச்சம்! சிறியவனான என்னைக் கூட பார்த்து பயந்துட்டு போறதைப் பாரு!'' என்று சொல்லி சிரித்தது. அதைக் கேட்ட நண்பன், ""ஏ முட்டாள்! அப்படி எண்ணாதே! யானை ஆற்றில் குளித்து விட்டுப் போகிறது. நீயோ சேற்றில் குளித்துவிட்டு அழுக்கோடு திரிகிறாய். ஒருவேளை யானையின் காலில் நீ சிக்கியிருந்தால் ஒரே மிதியில் உன்உயிர் போய் விடும். ஆனாலும், அந்த யானை உன்னை மிதித்து தன் காலைச் சேறாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் ஒதுங்கிப் போனது என்பதைப் புரிந்து கொள்,'' என்றது. உலகில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களைப் பார்த்தால் நல்லவர்கள் அவர்களுடன் மோத முயலாமல், ஒதுங்கிப் போவதே நல்லது. பன்றி மேல் மோதினால் மோதிய வருக்கே நஷ்டம்! எனவே, கெட்டவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுங்கள்.
Monday, 18 September 2017
கெட்டவர்களை கண்டால் ஒதுங்கு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment