Saturday 16 September 2017

முருகனுக்கு "பாவாடை' நைவேத்யம்

Image result for murugan

வழக்கமாக சுவாமிக்கு திரைமறைவில் தாம்பாளத்தில் நைவேத்யம் செய்வது மரபு. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு நைவேத்யமாக திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விரதம் முடிந்த மறுநாள், "பாவாடை  நைவேத்யம்' செய்யப்படுகிறது. பக்தர்களைப் போலவே, முருகப்பெருமானும் கந்தசஷ்டி காலத்தில் நியமத்தோடு ஆறுநாட்கள் விரதம் மேற்கொள்கிறார். ஆறாம் நாள் சூரபத்மனை வதம் செய்து வெற்றிவாகை சூடுகிறார். கடும் பசியுடன் வருவோர் சற்று அதிகமாக சாப்பிடுவது வழக்கம் தானே! இதனால், அன்று முருகனுக்கும், அவருடன் போர் செய்த வீரர்களுக்குமாக சேர்த்து 100படி அரிசியில் தயிர் சாதம் தயாரிப்பர். ஒரு மரப்பெட்டியில் ஓலைப்பாய் இட்டு, அதன் மேல் தலைவாழை இலையை விரிப்பர். அதன்மேல், தயிர்சாதம் நிரப்பப்படும். வெறும் தயிர் சாதத்தை சாப்பிட முடியுமா? "சைடு டிஷ்' வகைகளாக தேன்குழல் (முறுக்கு), அப்பம், வடை, நெல்லிக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய்களை சாதத்தின் மேல் அடுக்கி வைப்பர். இலையின் நான்கு மூலைகளிலும் இளநீர், தேங்காய், பழம் வைக்கப்படும். அப்போது முருகப்பெருமான் தங்க கவசம் சாத்தி இருப்பார். இந்த நைவேத்தியத்தை ஏற்று முருகப்பெருமான் சஷ்டி விரதத்தை நிறைவு செய்வதாக ஐதீகம்.  சரி...இந்த நைவேத்யத்துக்கு "பாவாடை' என்று பெயர் சூட்டினார்கள் தெரியுமா? "பாவாடை' என்ற சொல்லுக்கு, "நிலத்தில் விரிக்கும் சேலை' என்று பொருளுண்டு. இப்போதும் கூட சில கோயில்களில், சுவாமி சன்னதி முன்பு, தரையில் துணி விரித்து அன்னத்தை அதில் கொட்டுவது வழக்கம். ஒரு காலத்தில் திருப்பரங்குன்றம் முருகனுக்கும் இவ்வாறே கந்தசஷ்டிக்கு மறுநாள் நைவேத்யம் செய்யப்பட்டது. காலப்போக்கில் மரப்பெட்டிக்குள் விரித்த இலையில் நைவேத்யம்  செய்யும் வழக்கம் வந்திருக்கலாம் என்பது ஒரு கணிப்பு. 

No comments:

Post a Comment