Friday 10 November 2017

நம்மைச்சுற்றும் நவக்கிரகம்


தமிழகக் கோயில்கள் சிலவற்றில் வித்தியாசமான முறையில் நவக்கிரகங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வோமா! 

* கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் நீலகண்டவிநாயகர் சந்நிதி எதிரே அமைந்துள்ள மண்டபத்தின் மேல் விதானத்தில், நவக்கிரகங்கள் வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். அவற்றை அண்ணாந்து பார்த்தே தரிசிப்பர். 

* திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோயிலில், நந்தீஸ்வரர் எதிரே அகல் போன்று ஒன்பது குழிகள் உள்ளன. அந்த குழிகளைநவக்கிரகங்களாக கருதி, விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

* சென்னை தி.நகர் அகத்தியர் கோயிலில் உள்ள நவக்கிரகங்களில் சூரிய பகவான் மட்டும் தேரில் காட்சி தருகிறார். 

* திருச்செந்தூர் முருகன் கோயிலில் குருவும், சனீஸ்வரரும் மட்டும் எழுந்தருளியுள்ளனர். வேறு கிரகங்கள் இல்லை. 

* புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில், மாணிக்கவாசகர் சந்நிதானத்தில் நவக்கிரகங்களுடன், 27 நட்சத்திரங்களும் தூணில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். தனியே நவக்கிரக சந்நிதி இல்லை. 

* தஞ்சாவூருக்கு நிகரான பெருமையுடைய கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களும் ஒரே கல்லில், வான சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளனர். தாமரை வடிவ பீடத்தில் நடுவில் சூரியனும், இதர கிரகங்கள் அதைச் சுற்றி இதழ் வடிவிலும் உள்ளன. சூரியனின் சாரதி அருணன், ஏழு குதிரைகள் பூட்டி தேரை ஓட்டுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. 

* திருவாரூர் தியாகராஜர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர், திருக்குவளை கோளிலிநாதேஸ்வரர் கோயில், திருவாய்மூர் வாய்மூர்நாதர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதநாதர் கோயில், கோடியக்கரை குழகர், வைத்தீஸ்வரன் கோயில், சிவகங்கை மாவட்டம் பிரான்மலை உமாமகேஸ்வரர் கோயில்களில் நவக்கிரகங்கள், தங்களது திசையில் இல்லாமல் நேர் வரிசையில் காட்சி அளிப்பது அபூர்வமானது.

* திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்களில் சூரிய பகவான் நடுவில் இருக்க, இதர கிரகங்கள் வட்டமாக உள்ளன. 

* தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டிலுள்ள பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களின் நடுவே, நந்திதேவர் அமர்ந்திருக்கிறார்.

* மதுரை கூடலழகர் கோயில், நாகப்பட்டினம் சவுரிராஜப் பெருமாள் கோயில், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்களிலும் நவக்கிரக சந்நிதி உள்ளது.

No comments:

Post a Comment