Saturday 4 November 2017

அனைத்து பேறுகளும் கிடைக்க அருள்பாலிக்கும் சொரிமுத்தய்யனார்


நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள  காரையாறு அருள்மிகு சொரிமுத்தய்யன் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்பு  மிக்கதாகும். தென்னாட்டில் பண்டைக்காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது தற்போது சொரிமுத்தய்யன் சந்நிதி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பொதிமாடுகளின் ஓயாத குளம்படிபட்டு பாறையில் ஓரிடத்தில் குருதி பெருகியது கண்டு, வணிகர்கள் அந்த இடத்தில் திரண்டு அதிசயமாக பார்த்தனர். அப்போது அங்கு ஒரு அசரீரி, குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் அருள்மிகு மாகலிங்க சுவாமி ஆவார் என்றும் இனி வரும் காலங்களில் அருள்மிகு மகாலிங்க சுவாமியை சொரிமுத்தையன், சங்கிலிமாடன், பிரம்மராட்சசி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வருக என ஒலித்தது. 

அதன்படியே தற்போதுள்ள சந்நிதிகளை எழுப்பி வணிகர்கள் வழிபாடு செய்துவந்தனர். அருள்மிகு பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாண காட்சியை காண தேவர் முனிவர் உட்பட அனைத்து உயிர்களும் வடதிசையில் திரண்டனர். இதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததாகவும் இதனை சமன் செய்ய பரமேஸ்வரர் அகத்திய முனிவரை தென்திசை நோக்கி அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி அகத்திய முனிவர் தென்திசையை நோக்கி பொதிகை மலையில் தற்போது சொரிமுத்தய்யனார் சந்நிதி அமைந்திருக்கும் இடத்தில் காலையில் நீராடி நேம நிட்டைகளை முடித்து யோக நித்திரையில் இருக்கும்போது ஜோதி ஒன்று தோன்றியதை கண்டு அதிசயத்து தனது ஞான திருஷ்டியால் பார்த்தார். 

அருள்மிகு சாஸ்தாவானவர் சொரிமுத்தய்யனாராக தோன்றிய அருள்மிகு மகாலிங்க பெருமானை பிரம்மராட்சசி பேச்சியம்மன் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளும் சூழ்ந்து பூஜித்து தியானித்து கொண்டிருந்த காட்சி தென்பட்டது. அகத்திய முனிவர் இதுகண்டு ஆனந்தம் அடைந்தார். அங்கு மலர் சொரிந்து இந்த இடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆகவேண்டும் என்றும் பக்தர்கள் தன் மக்களுடன் வழிவழியாய் எல்லா பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அப்போது மலர் சொரிந்தது. மேலும் சாஸ்தாவானவர், மலர் சொரிந்து முத்தய்யனார் என்று பெயர் பெற்று, அருள்மிகு மகாலிங்கேஸ்வரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலமாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒன்றாக காட்சி கொடுத்து மறைந்தார்.

அன்று தொடங்கி இன்றுவரை இந்த கோயிலில் இந்த தெய்வங்கள் அனைத்திற்கும் சந்நிதி ஏற்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். முன்னர் 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மழை இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ஆடி அமாவாசை நாளில் இக்கோயிலில் சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தார். இதனால் மாதம் மும்மாரி பொழியும், வறட்சி நீங்கும் என கூற அதேபோல் புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ததும் வறட்சி நீங்கியது. மழை பெய்ய வைத்த அய்யனார் சொரிமுத்தய்யனார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோயில் தினமும் காலை 6 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் கால பூஜைகள் நடக்கின்றன.

இங்கு அகத்திய முனிவருக்கு இறைவன் காட்சி தந்த ஆடி அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து பேறுகளும் கிடைக்கும் என்பது சான்றோரின் நம்பிக்கை. நெல்லை மாவட்டத்தின் குறிப்பிட்ட பெரிய திருவிழாவான அன்றைய தினம்  மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

மணி விழுங்கி மரம்

இத்திருக்கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் உள்ளது. பக்தர்கள் வேண்டுதலின்படி  இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே புதைந்துவிடுவதால் இது மணி விழுங்கி மரம் என அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன்  இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment