இறைவன் இயற்கையில் உறைகிறான். இந்திரனின் கடலும், கடல் சார்ந்த பகுதியில் ஐவேல மரங்களும் பலவகை மூலிகைகளும் நிரம்பியுள்ள விழுப்புரம் மாவட்டம், கடற்கரை ஓரம் அமைந்துள்ள கீழ்புத்துப்பட்டு வனப்பகுதிக்குள் இறைவன் அவதரித்து மஞ்சனீஸ்வரர் என்ற பெயரோடு பூரணை-புஷ்கலை சமேத அய்யனாராகத் தனது படை பரிவாரங்களுடன் அமைந்து காத்து அருளுகிறார்.
பஸ்மாசூரன் எனும் அரக்கன் தன்னை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு பலத்தோடு இருப்பதற்காக யாரிடம் வரம் கேட்கவேண்டும் என்று நாரதரிடம் கேட்டான். அவர், ஈஸ்வரனை வேண்டித் தவம் செய்யச்சொன்னார். அதன்படி தவம் செய்த பஸ்மாசூரன், தன் முன்பு தோன்றிய ஈசனிடம், ‘‘நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிடவேண்டும்,’’ என்ற வரத்தினை வேண்டிப் பெற்றான்.
வரம் கிடைத்த உடனேயே அதைச் சோதித்திட ஈசனின் தலையிலேயே கை வைக்க நெருங்கினான் பஸ்மாசூரன். தான் தவறு செய்து விட்டதற்காக வருந்திய ஈஸ்வரன் அருகிருந்த ஐவேலங்காட்டில் புதரினுள் சென்று மறைந்தார். அங்கும் அசுரன் வரவே அங்கிருந்த ஒரு மரத்தின் காயாக மாறினார். அரக்கனும் ஆடு உருவம் கொண்டு காய்களைத் தின்னத் துவங்கினான். நிலமை தன்னை மீறிப்போவதை உணர்ந்த ஈஸ்வரன் ஒரு கட்டத்தில், ‘‘கிருஷ்ணா...’’ என திருமாலை அழைத்தார். பரமாத்மாவான திருமால் மோகினி வடிவில் தோன்றினார். அந்த அழகியப் பெண்ணைக் கண்டு மோகம்கொண்ட பஸ்மாசூரன் மோகினியை காம எண்ணத்துடன் நெருங்கினான்.
தவம் செய்ய புற்றுக்குள் இருந்தவனல்லவா, அவன் உடலெல்லாம் மண்சேறும் சகதியுமாக இருந்தது. அவனை உடலைக் கழுவிக்கொண்டுவரக் கூறினாள் மோகினி. பஸ்மாசூரன் அருகிலுள்ள நீர்நிலை சென்று கை, கால்களைக் கழுவினான். தோள் முதுகு ஆகியவற்றை கழுவிக்கொண்டு, வழக்கப்படி நீரை அள்ளி தலைமீது வைத்தபோது அவன் பெற்ற வரத்தாலேயே அவன் எரிந்து சாம்பலானான்.
திருமால், மோகினி அவதாரத்தின் நோக்கமாக, காவல் தெய்வமாக அய்யனார் என்ற சிவசக்தியுருவை இத்தலத்தில் உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்தவரை தேவகுரு பந்தளராஜா வேட்டைக்குச் செல்லும் வழியில் கண்டெடுத்தார். குழந்தையை வளர்த்து சகல வித்தைகளும் பயிற்றுவித்து சிறக்கச் செய்தார். மலையாள நாட்டில் சிறுவன் ஐயப்பனாக வாசம்செய்து மீண்டும் வாலிபப் பருவத்தில் இத்தலத்திற்கே திரும்பினார். இலவஞ்சி நாட்டு அரசன் மகள் பூரணையையும், நேபாள தேசத்து அரசன் பிகரஞ்சன் மகள் புஷ்களாம்பிகையும் மணந்தார். திருமணத்தில் கலந்து கொண்ட திருமால், ஐயப்பனை, அங்கிருந்தபடியே உலகைக் காவல் காத்துவரப் பணித்தார்.
தலையில் தெளித்துகொள்ளும் புனிதநீர் மஞ்சனநீர் எனப்படும். பஸ்மாசூரன் தலையில் தெளித்து கொண்ட நீரால் தீயது அழிந்து உலகைக் காக்கும் காவல் தெய்வமாக அய்யனார் உருவானதால், மஞ்சனம் + ஈஸ்வரர் ‘மஞ்சனீஸ்வரர்’ என அழைக்கப்பட்டு காட்டில் புற்றுகள் நிறைந்துள்ள இடத்தில் கீழ்புத்துப்பட்டு என்னும் பெயர்பெற்ற அந்த வனத்திலேயே கோயில் கொண்டார். காவல் தெய்வமாகவும் மனிதரின் தீமையை அழித்து நன்மையையும் செய்வதால் ஈஸ்வரன் என்ற பட்டமும் அவருக்குச் சேர்ந்து மஞ்சனீஸ்வரர் என வணங்கப்பட்டார்.
உலகைக் காவல் காக்கும் பணி இருப்பதால் கோயிலில் சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை இங்கு தரிசிக்கவரும் மக்களுக்கு அருள்செய்து பிறகு வானுலகம் சென்று தேவர்கள் முனிவர்கள் போன்றோர் அளிக்கும் பூஜையை ஏற்று நள்ளிரவில் தன் வெள்ளைக் குதிரையில் ஏறி பரிவாரங்கள் மற்றும் உதவியாளர் மலையாளத்தார் உடன்வர, மஞ்சு எனப்படும் மேகத்திற்குள் புகுந்து உலகம் முழுவதும் காவல் காத்து வருகிறார். அப்போது மேகங்கள் இவருடன் துணையாக அணிவகுத்துச் செல்லும். ஆதலால் இவர் ‘மஞ்சனீஸ்வரர்’ ஆனார் எனவும் கூறப்படுகிறது. அருகில் பரந்த நீர்நிலை ஒன்று உள்ளது. அங்குதான் பஸ்மாசுரன் தன் உடலை கழுவும்போது தலையில் கை வைத்துக்கொண்டு சாம்பலாகிப் போனான். அந்த இடம் இன்றும் ‘கழுவெளி’ என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள குதிரைக்கோயிலில் பிரார்த்தனைக்காக வேண்டிக்கொள்வதும், உறுதிமொழி செய்து கொள்வதும், பிரார்த்தனை நிறைவேற குதிரைக்கால்களில் சீட்டுக்கட்டுவதும், நிறைவேறியவர்கள் பிரார்த்தனை செலுத்துவதும் இயல்பான நிகழ்ச்சிகளாகும். மனக்கஷ்டம், குழப்பம், களவு, கொள்ளை போன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் குதிரைக்காலில் சீட்டு எழுதி கட்டிவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது. பெண்கள் பலர் தங்கள் குடிகாரக் கணவர்களை அழைத்துவந்து ‘இனி குடிக்க மாட்டேன்’ என எழுதிக் கையெழுத்துப்போட்டு சீட்டுக் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். இந்த பிரார்த்தனைக்குப் பிறகு பல குடிகாரர்கள் மனம் திருந்தியிருக்கிறார்களாம்! வராக்கடனுக்காகவும் கணவன்-மனைவி அமைய வேண்டியும் பிரார்த்தனை செய்துகொண்டும் சீட்டுக் கட்டுகிறார்கள்.
பொங்கல் வைத்தல், காது குத்தல், மொட்டை அடித்தல் என்று வேண்டுதலை நிறைவேற்றும் பலருக்கு குலதெய்வமாகவும் விளங்கும் ஐயனார் உறையும் இத்திருக்கோயில், பழமையானது, சக்திவாய்ந்தது. ஆடி கார்த்திகை, தை, சித்திரை மாத திங்கட்கிழமைகள் முக்கியமான வழிபாட்டு நாட்களாகும். ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சிறப்பு தரிசனம் உண்டு. மாசிமகம் உற்சவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நடுகாட்டிற்குள் கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் பூரணை, புஷ்கலையுடன் அய்யனார் மஞ்சனீஸ்வரராக வீற்றிருக்கிறார். நுழைவாயில் முன்புறம் பலிபீடமும், யானை வாகனமும் உள்ளன. மண்டபத் தூண்களில், இத்திருக்கோவில் வரலாற்றுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்குள் சுப்ரமணியர் சந்நதியும், தெற்கே விக்னேஸ்வரர் சந்நதியும் தனித்தனி கோயில்களாக உள்ளன.
மஞ்சனீஸ்வரர் அவதாரத்திற்குக் காரணமான பெருமாளுக்கும் சந்நதி உள்ளது. கோயிலின் பின்புறம் மேற்கில் குதிரைக்கோயில், புத்துக்கோயில், நாகாத்தம்மன் கோயில், விநாயகர் கோயில் ஆகியன அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பாக மஞ்சனீஸ்வரரின் நண்பர் மற்றும் அவரது காவலரான மலையாளத்தாரை தரிசிக்கலாம். ஐயனாருக்குப் படைக்க முடியாத வஸ்துக்களை இவருக்குப் படைப்பது வழக்கம். தமிழகத்தில் அய்யனாராக அவதரித்து, கேரளத்து பந்தளராஜா எடுத்து வளர்த்த நிலையில் ஐயப்பன் ஆனதாகவும் மீண்டும் தமிழகம் வந்து திருமணம் புரிந்துகொண்டதாகவும் வரலாறு உள்ளதால் ஒவ்வொரு கார்த்திகை மாதம் முதல்நாள் தொடங்கி, மகரதீபம்வரை சிறப்பான நாட்களாக ஐயப்ப பக்தர்களால் வழிபடப்படுகிறது.
அதோடு சபரிமலை செல்வதற்கு முன்போ, சென்று விட்டு வந்த பின்போ குருசுவாமிகளால் இங்கு பிரார்த்தனைகள் செலுத்தப்படுகின்றன. மேலும் மகர ஜோதிக்கு செல்ல முடியாதவர்கள், மலையேறக் கூடாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விளக்கேற்றிவருகிறார்கள். புதுச்சேரிக்கும், மரக்காணத்திற்கும் நடுவே 15 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்புத்துப்பட்டு. பிரதான சாலையில் இறங்கி மேற்கே ஒரு கி.மீ. நடந்து சென்றால் ‘ஐவேலங்காடு’ என்று அழைக்கப்படும் பச்சை மூலிகைகள் நிறைந்த காட்டின் நடுவில் அமைந்துள்ள இத்திருக்கோயில், காலை.6.30 முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment