Sunday 4 February 2018

அகத்தியர் வழிபட்ட முருகப்பெருமான்

அகத்தியர் வழிபட்ட முருகப்பெருமான்

தோரணமலைக்கு வந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கி பிணி போக்கியும், முருகனின் பெருமைகளை எடுத்துக்கூறியும் அகத்தியர் ஆனந்தம் கொண்டார்.

தோரணமலையின் முந்தைய பெயர் வாரணமலை. வாரணம் என்றால் யானை என்று பொருள். யானை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு வாரணமலை என்று பெயர் வழங்கப்பட்டது. அதுவே மருவி தற்போது தோரண மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் ஒரு குகைக்குள் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

தோரணமலை குருவுக்கும், நல்ல சீடனுக்கும் உகந்த தலம் என்பதை, அகத்தியரின் தோரணமலை வருகையும், தேரையர் சித்தர் இயற்றிய மருத்துவ நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. கயிலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடந்தது. இதனைக் காண தேவர்கள், சித்தர்கள் என அனைவரும் அங்கே சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. இதனை சரி செய்ய அகத்தியரைத் தேர்வு செய்த ஈசன், தென்திசை நோக்கி செல்லும்படி பணித்தார்.

தென்திசை வந்த அவர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அமைந்த தோரணமலையின் இயற்கை அழகில் மனம் லயித்தார். இதனால் அந்த மலையில் சில காலம் தங்கி தவம் புரிந்தார். அப்போது மூலிகை ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

இதையறிந்த அவ்வையார், ஒரு சிறுவனுடன் அங்கு வந்தார். ‘அகத்தியரே.. இந்தச் சிறுவன், பிறவி ஊமை. பெயர் பொன்னரங்கன். உங்களின் ஆராய்ச்சிப் பணிக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன்’ என்றார்.

மருந்துகளை பொன்னரங்கன் உதவியுடன் தயாரித்து குகைகளில் வைத்துப் பாதுகாத்தார் அகத்தியர். ஆராய்ச்சித் திக்கெட்டும் பரவியது. தோரணமலைக்கு வந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கி பிணி போக்கியும், முருகனின் பெருமைகளை எடுத்துக்கூறியும் அகத்தியர் ஆனந்தம் கொண்டார்.

முருகப்பெருமானின் அருளால் பொன்னரங்கனின் பிறவி ஊமைத் தன்மை நீங்கியது. இவரே பின்னாளில் தேரையர் என்று அழைக்கப்பட்டார். இதன் பின் அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்றார். குருவின் ஆணைப்படி தோரணமலையில் வசித்து மூலிகை ஆராய்ச்சி செய்து வந்த தேரையர், பதார்த்தகுண சிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறி நூல் உள்பட 21 மருத்துவ நூல்களையும் தொல்காப்பியம் என்ற இலக்கிய நூலையும் இயற்றினார். சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்த தேரையர் இறுதியில் தோரணமலையிலேயே ஜீவ சமாதி ஆனார்.

தோரணமலை அடிவாரம், மலை உச்சி இரண்டிலும் இறைவனின் சன்னிதிகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து 926 படிகள் ஏறிச் சென்றால் மலையில் உள்ள முருகனை தரிசிக்கலாம். குகைக்குள் கிழக்கு நோக்கி முருகப்பெருமான், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, இளவரசரைப் போல கிரீடம் சூட்டி, வலது கையில் வேல் தாங்கி மயிலுடன் காணப்படுகிறார்.

அடிவாரம், உச்சி இரண்டிலுமாக கோடையிலும் வற்றாத 64 சுனைகள் உள்ளன. வெவ்வேறு சுவையும் தனித்தனி மருத்துவ குணமும் கொண்டவை இவை. வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம், மகப்பேறு கிடைக்க இத்தல முருகனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்த ஆலயத்திற்கு கல் திருப்பணி செய்வதாக வேண்டிக்கொண்டு, 48 நாட்கள் விரதமிருந்து, தினமும் சுனையில் நீராடி தியானம் செய்து முருகனை வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தல முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களும், விசாகம், கிருத்திகை நட்சத்திரங்களும் சஷ்டி திதியும் உகந்தவை. வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து இத்தல இறைவனை வழிபட, இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள செக்போஸ்ட்டில் இருந்து 3 கிலோமீட்டர் உட்புறமாகவும் தோரணமலை அமைந்துள்ளது.

No comments:

Post a Comment