"நான்' என்னும் ஆணவ எண்ணத்தைப் போக்குவதே தெய்வ வழிபாட்டின் நோக்கம். இதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கந்தபுராணத்தில் உள்ளது. ஒருமுறை சிவ தரிசனத்திற்காக கைலாயம் வந்தார் பிரம்மா. ஞான பண்டிதரான முருகன் வழியில் நின்றார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல பிரம்மா உள்ளே சென்றார். முருகன் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. பிரம்மாவைத் தண்டிக்கவும் விரும்பவில்லை. சிறிது நேரத்தில் சிவ தரிசனம் முடித்து பிரம்மா திரும்பினார். அப்போதும் பிரம்மாவுக்கு "நான்' என்னும் ஆணவம் நீங்கவில்லை. இதைக் கண்ட முருகன், பிரம்மாவை சிறையில் தள்ளினார்.
சிறைப்படுத்திய காரணத்தை சிவன் கேட்டதற்கு முருகன், ""தந்தையே! உம்மைத் தரிசிக்கும் முன்னும் ஆணவம் இருந்தது. வழிபட்டு வந்த போதும் அது நீங்கவில்லை. அதனால் சிறை பிடித்தேன்,'' என்று பதிலளித்தார். இதனை, "நின்னை வந்தனை செய்யினும் தன் அகந்தை தீர்கிலான்' என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆணவத்தைப் போக்கவே, கோவில்களில் கொடிமரத்தின் முன் பலிபீடம் இடம் பெற்றுள்ளது. அதைக் கடக்கும் போது மானசீகமாக "நான்' என்னும் கொம்பு முளைக்காமல் இருக்கும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment