Friday, 2 February 2018

யார் இந்த பிரியாவிடை


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின் போதும், பிற விழாக்களின் போதும் பிரியாவிடை என்னும் அம்பிகை உடனிருப்பாள். எல்லார் பார்வையும் மீனாட்சி மீது இருந்தாலும், யார் இந்த பிரியாவிடை என்று சந்தேகமும் எழுவதுண்டு. இந்த அம்பிகை சுந்தரேஸ்வரருடன் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருந்தாலும் யார் கண்ணிலும் படுவதில்லை என்பது தான் விசேஷம்.

சிவபெருமான் தனக்குள் அம்பிகையை ஐக்கியப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருளுகிறார். சிவம் வேறு, சக்தி வேறு இல்லை. சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் பாணம் சிவ வடிவம். ஆவுடை எனப்படும் பீடம் அம்பிகையின் அம்சம். சிவசக்தி சொரூபத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவலிங்கத்திற்கு இப்படி ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு "சிவனை பிரியாத ஆவுடை' என்பதே "பிரியாவிடை' என்று மருவி விட்டது.

இவள் சிவனுக்குள்ளேயே மறைந்திருக்கும் சக்தியாக இருக்கிறாள். அதனால் தான் பக்தர்களின் பார்வை படாத இடத்தில் மறைவாக வைத்துள்ளனர். இவளுக்கு நித்திய பூஜை உண்டு. அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இது உலோகச் சிலையாகும்.

பெரும்பாலான சிவன் கோவில்களில் மூலஸ்தானத்திற்குள் மனோன்மணி என்னும் அம்பிகை இருப்பாள். மனதிற்குள் இருக்கும் மணி (மனம் + உள்+ மணி) என்ற பொருளில் இவளை இப்படி அழைப்பர். இவளை பக்தர்கள் வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. திருவண்ணாமலை போன்ற பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலும் பிரியாவிடையுடன் சிவன் காட்சியளிக்கிறார்.

No comments:

Post a Comment