அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல.
உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லாவிரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி!
விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.
(சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.
மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.
அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.
விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.
விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.
தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment