Monday, 4 June 2018

உளுந்து வடையும் ஜாங்கிரியும்!


வட இந்தியாவிலிருந்து, காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க வந்த அன்பருக்கு ஒரு சந்தேகம். பரமாச்சாரியாரிடம் விளக்கம் கேட்டார்.

''சுவாமி! பாரத தேசம் முழுவதும் அனுமன் கோயில்கள் உள்ளன. தென்னிந்தியாவில் அனுமனுக்கு வடைமாலை சாத்துகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை அணிவித்து மகிழ்கிறார்கள். அனுமனது மாலையின் பின்னணியில் உள்ள கதை என்ன? வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் மாலைகளில் ஏன் இந்த வேறுபாடு?' சுவாமியைச் சுற்றி அமர்ந்திருந்த அன்பர்கள் சுவாமிகளின் பதிலை அறிய ஆவலோடு காத்திருந்தனர். பெரியவர் பேசலானார்:

''அனுமன் குழந்தையாக இருந்தபோதே மகா பராக்கிரமசாலி. சூரியனின் சிவந்த நிறத்தைப் பார்த்து, ஏதோ உண்பதற்குரிய பழம் என வானில் தாவிப் போய் சூரியனைப் பிடித்து விட்டான். அதே நேரம் கிரகங்களில் ஒன்றான ராகு என்கிற பாம்பு, சூரியனைப் பிடித்து கிரகணம் ஏற்படுத்த வேண்டிய தருணம் என்பதால், அதுவும் சூரியனை விழுங்க வந்து கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் அனுமன் தான் ஜெயித்தான். ராகு மகிழ்ந்து அனுமக் குழந்தைக்கு ஒரு வரம் அருளியது. 

உத்தமமான உளுந்தால் பலகாரம் செய்து அனுமனுக்கு அணிவிப்பவர்களுக்கு ராகு தோஷம் எதுவும் செய்யாது. அனுமனை உளுந்தால் வழிபடும் அன்பர்கள் எனது (ராகுவின்) அருள் பெறுவர் என்றது. 

உளுந்தால் பலகாரம் செய்து வழிபடுபவர்களுக்கு அருள் புரிய அனுமனும் ஒப்புக் கொண்டான். ராகு, பாம்பு என்பதால் பாம்பை போலவே வளைந்துள்ள பலகாரமாக அது இருக்க வேண்டும் என்றது ராகு. உளுந்து வடை வளைந்து தானே இருக்கிறது? அதனால் அதை மாலையாக அனுமனுக்குச் சாத்தி, ராகு தோஷம் நீங்கப் பெற்றார்கள் பக்தர்கள். 

வடக்கே மட்டும் ஏன் ஜாங்கிரி மாலை என்பது தானே உங்கள் கேள்வி? தெற்கே உப்பளங்கள் அதிகம். எனவே உப்பு கலந்து உளுந்து வடை செய்தனர். வடக்கே கரும்பு நிறைய விளைகிறது. எனவே இனிப்பு கலந்து ஜாங்கிரி செய்து மாலையாக்கி அணிவித்து மகிழ்ந்தனர். வடையோ, ஜாங்கிரியோ இரண்டுமே உளுந்தால் செய்யப்படுபவை தானே! புராணங்களின் சாரமும் அனுஷ்டானமும் பாரததேசம் முழுவதிலும் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவை ஒரே தேசமாக இணைப்பது நம் ஆன்மிகம் தான்!'' என்றார். பெரியவரின் பதிலைக் கேட்டு அன்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

No comments:

Post a Comment