Wednesday, 6 June 2018

பித்ருசாபம் நீக்கும் வயலூர் சிவன்கோயில்

Vayalur__1_

திருமலைராஜபுரம் சாலையில் அமைந்துள்ளது வயலூர் சிவன் கோயில். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரை கி.மீட்டம் தூரம் ஊருக்குள் செல்லவேண்டும். 

திருவிடைமருதூர் கோயில் மூலலிங்க கருவறையாகவும் நவக்கிரகங்களில் கோனேரி ராஜபுரம் சூரியனாகவும், அன்னியூர்- புதனாகவும், நாகம்பாடி- சுக்கிரனாகவும், எஸ்.புத்தூர்- குருவாகவும், வைகல்- கேது, வயலூர்- ராகு, சிவனாகரம்,-சனி, கருவிலி-செவ்வாய்க்கும் உரிய தலமாக இருக்கிறது.

முன்னொரு காலத்தில் பூலோகமே காடுகளாக இருந்த போது நாகலோக நாகங்கள் பூமிக்கும் வந்து வாழ்ந்துவந்தன, அப்போது கார்கோடகன் எனும் நாகன் பூமியில் வசிக்கும் தவசீலர்களை துன்புறுத்தி வந்தான், ஒரு முறை கர்கி முனிவரிடம் ஏற்பட்ட பிரச்னையில், அவர் கார்கோடகனை கண் தெரியாமல் போக என சபிக்கிறார்.

கண்தெரியாமல் பூமியில் உழலும் கார்கோடகன் முனிவரிடம் சாப நிவர்த்தி கேட்கிறான். முனிவரும் மனமிறங்கி உன் அருகாமையில் உள்ள குளத்தில் நீராடி, வில்வமரத்தின் இலைகளை பறித்து சிவனை நோக்கி தவம் செய்வாயாக. சிவன் உனக்கு அருள் தருவார் என கூறுகிறார். கார்கோடகனும் அவ்வாறே செய்ய சிவன் காட்சி கொடுக்கிறார். 

இருப்பினும் முனிவர் கொடுத்த சாபத்தை நீக்க இயலாது. உனக்கு கண் தெரியும்போது காது கேட்காது, காது கேட்கும்போது கண் தெரியாது என கூறுகிறார். தேவைக்கு ஏற்ப நீ உபயோகப்படுத்தி வாழ்வாயாக என அருள் தருகிறார். இன்று முதல் உனக்கு சக்ஷுச்வரஸ் என பெயர் பெறுவாய் என கூறினார். 

அதனால் இக்கோயிலின் எதிரில் உள்ள குளம் கார்கோடக தீர்த்தம் எனவும், பித்ருசாபம், குருசாபம், சர்ப்பசாபம் ஆகியவை நீங்க இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெறலாம். ராகு தோஷ நிவர்த்திக்கும் ஏற்ற தலம் இதுவாகும். கருவறை புற சுவற்றில் கார்கோடகன் இறைவனை வணங்கும் சிற்பம் உள்ளது. இக்கோயிலில் உச்சிகால பூஜையில் சுக்கும் நாட்டுசர்க்கரையும் கலந்து இடித்த நிவேதனம் தருகின்றனர். 

இறைவனின் அருகில் இறைவி தெற்கு நோக்கி உள்ளார். பிரகாரத்தில் விநாயகரின் சிற்றாலயமும், வடபுறத்தில் மேற்கு நோக்கிய சிவலிங்கமும் உள்ளன. 

இறைவன் - கார்கோடகேஸ்வரர் 

இறைவி - மங்களாம்பிகை

No comments:

Post a Comment