Thursday, 7 June 2018

பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம்

nemam_22

திருமழிசை திருவள்ளூர் சாலையில் உள்ளது நேமம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து ஒரு கிமீ தூரம் தெற்கில் சென்றால் நேமம் கிராமம் உள்ளது. சென்னையை ஒட்டிய ஊராதலால் நெல் வயல்கள் தம் கடமை மறந்து கட்டிடங்களை சுமக்க ஆரம்பிக்கின்றது.

இங்கு ஒரு ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய சிவாலயம். பிரதான சாலை, மேற்கில் இருப்பதால் ஐந்து நிலை கொண்ட கோபுரம் மேற்கில் விளங்குகிறது. இறைவன் ஆவுண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பாணம் கொண்டு இருப்பது தன்னம்பிக்கை தரும் காட்சியாக உள்ளது.

மணலால் மூடப்பட்டுக் கிடந்த இந்த லிங்கத்தினை ஒரு பசு தனது காலால் தோண்டி எடுத்தபோது இறைவன் தலையில் ஒரு சிறு பள்ளம் ஏற்பட்டுள்ளது, அதனால், இறைவன் ஆவுண்டீஸ்வரர் எனப்படுகிறார். விமானம் கஜபிருஷ்ட்ட விமானம்  இறைவனைக் காண தென்புறம் வாயில் வழி செல்லவேண்டும், கிழக்கில் சாளரம் மட்டுமே உள்ளது. தென்புறம் வாயில் மண்டபம் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஆயிரம் வருடங்களின் முன் ஜெயம்கொண்ட சோழன் எனப்படும் ராஜாதிராஜசோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளின் முன் பெரிய அளவில் பணிகள் செய்யப்பட்டு தற்போது உள்ள நிலையில் உள்ளது.

இக்கோயில் பித்ரு தோஷம் நீக்கும் தலமாக சொல்லப்படுகிறது. இறைவி அமிர்தாம்பிகை தெற்கு நோக்கி அழகிய முகத்துடன் உள்ளார். 

• பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தலத்தினை தரிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் பிறந்த நோக்கம், வாழ்வில் தெளிவான எண்ணம் ஏற்படும். குடும்பத்தலைவன், பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அதனை நீக்கவும் இங்கு வந்து வழிபடவேண்டும் எனக் கூறுகின்றனர். 

• கோ எனத் துவங்கும் பெயர் கொண்டவர்கள் இக்கோயிலை வழிபடுவது சிறப்பு என்கின்றனர்.

• பிரம்மனின் மூலாதார சிருஷ்டி கலசத்தின் மாவிலைகளில் இருந்த நீர்த்துளி இந்தத் தலத்தில் வீழ்ந்ததால் இது அமிர்த சக்தி மிக்க பூமியாக விளங்கி வருகிறது எனவும் தலவரலாறு கூறுகிறது.

• இந்தத் தீர்த்தம் கோயிலின் கிழக்கில் உள்ளது. தீர்த்த குளத்தில் அஷ்ட திக்கு பாலகர்கள் நீராடியதால் இந்தத் தீர்த்தம் ஔஷத தீர்த்தம் என்றும் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் நோயின்றி வாழ்வார் எனவும் கூறுகின்றனர். 

அமிர்த சக்தி மூன்று விதங்களில் நமக்கு கிடைக்கிறது, திருப்பாற்கடல், தாய்ப்பால், பசும் பால். இதுவல்லாது இங்குள்ள அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் இந்தச் சக்தியை கொண்டது. இத்தல அம்பிகைக்கு குங்குமப்பூ அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் சிறப்பு.

தென்மேற்கில் தனி சிற்றாலயமாக விநாயகர், வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருகில் வீரபத்திரர் சன்னதி உள்ளது. தென்புறம் காசி விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது. சனீஸ்வரர் வடகிழக்கில் மேற்கு நோக்கி உள்ளார். தென்கிழக்கில் பெரிய வேம்பும் அரசும் உள்ளன. அதன் அடியில் ஜேஷ்ட்டா மற்றும் சப்தமாதர் கிழக்கு நோக்கி உள்ளனர். ஒரு விநாயகரும் உள்ளார். ஒருமுறை சென்று வாருங்கள் இக்கோயிலின் தன்மையை உணர்வீர்கள்

No comments:

Post a Comment