Monday, 4 June 2018

நட்சத்திரம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை தீர்மானிக்குமா?


ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது, கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது என்ற பிரசாரங்கள் எல்லாம் ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு வழக்கத்தில் வந்தவை. ஒருவர் ஒரு நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே அவருக்கு எல்லா அமைப்புக்களும் வந்துவிடும், கிடைத்துவிடும் என்றால் ஜாதகத்தில் மற்ற கிரகங்களுக்கு என்ன வேலை? ஜாதக கட்டம், யோகம், தசாபுக்தி இவையெல்லாம் தேவையில்லாததாகிவிடுமே!. ஒருவருக்கான நட்சத்திரம் அவருடைய சொந்த வாழ்க்கையையே தீர்மானிக்காதபோது, அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தால் அடுத்தவருக்கு தீங்கு வரும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பரணியில் பிறந்தவர்கள் எல்லாம் தரணி ஆள வேண்டும் என்றால் இந்த நாட்டில் பரணியில் பிறந்தவர்கள் எல்லாம் அரசர்களாகவோ அல்லது தற்காலத்தில் பிரதமர், ஜனாதிபதியாகவோ அல்லவா இருக்க வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த பெண், திருமணமாகி கணவர் வீட்டிற்குச் செல்லும்போது, புகுந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கஷ்டங்கள், நஷ்டங்கள், குடும்பத்திற்கு ஆகாது. ஆயுள் முடிந்துவிடும் என்பதெல்லாம் சாஸ்திர விதிகளில் சொல்லப்படாதவை. நிகழ்ச்சிகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை, ஆயுள் முதற்கொண்டு எல்லாமே தீர்மானிக்கப்பட்டவை. இடையில் வருகின்ற மருமகளால் ஏதாவது நேர்ந்துவிடும் என்பது பலரால் பரப்பப்பட்ட வெற்று வதந்திகள். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக  ஏதாவது சம்பவம் நடந்திருக்கலாம். அதை அவ்வாறு அனுபவப்பட்டவர்கள் பிறருக்குச் சொல்ல, அதைக் கேட்பவர்கள் எல்லோருமே அது தமக்கும் பொருந்தும் என்று தவறாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். வாழ்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் அது ஒரு நட்சத்திரத்தினால் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment