நாமக்கல் நகரில் கவனம் ஈர்த்து நிற்கிறது ஆயிரமாண்டுகள் பழமையான நரசிம்மர், நாமகிரித் தாயார் திருக்கோயில். நாமக்கல்லை திருமாலின் கோட்டை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். நாமக்கல் மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேல் பகுதியில் நரசிம்மராகவும் திருமால் அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இதில் நரசிம்மர் கோயில் காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது.
மலைப்பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள குடவறைக்கோயில் இது. பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோயிலில் நரசிம்மரின் சிலை, மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோயில் மலையைக் குடையாமல் தனியாக கட்டப்பட்டுள்ளது.
பாறையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள நரசிம்மர், சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் தென்படுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவற்றின் ஒரு சாளரத்தின் வழியே ஆஞ்சநேயரை காணமுடியும். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களை பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரம் தொடுகிறது. நாமகிரி தாயார் கோயில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகின்றன.
‘‘புராண காலத்தில் இரண்யவதத்திற்கு பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் சண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலய குளத்தில் நின்று கணவரை நினைத்து தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலய குளத்தை கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார். தாகம் தீர்த்த அனுமனால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்தார். இப்படி நாமம் சூட்டிய நரசிம்மர் மலையாக அமர்ந்த இடமே ‘‘நாமகிரி’’ என்று போற்றப்பட்டது. அவருடன் அருள்பாலித்த லட்சுமிதேவியை நாமகிரி தாயார் என்று தேவர்கள் வணங்கினர்’’ என்பது தலவரலாறு. நரசிம்மரையும், நாமகிரி தாயாரையும் வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர்.
கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்கு காணிக்கைகள், சேலைகள், நகைகளை சமர்ப்பிக்கின்றனர். நரசிம்மரையும், நாமகிரித் தாயாரையும் வழிபட்டால் நலமும், வளமும் பெருகும். தீய சக்திகள் அண்டாது. மலைபோல் வரும் துயரங்களும் பனிபோல் விலகும் என்பது ஐதீகமாக உள்ளது. நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழா 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலையென திரண்டு நரசிம்மரையும், நாமகிரித் தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment