Friday, 8 June 2018

குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச்சனி

குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச்சனி

ஏழரைச் சனி என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் பருவத்திற்கேற்ப துன்பம் தரும். குறிப்பாக வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது.

அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன். 

எத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.

யோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம். 
உதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும். 

மாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாகும்.

சனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலானாவர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான். 

மன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொரு வருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.

எதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு.

No comments:

Post a Comment