Friday, 8 June 2018

ஆனந்த வாழ்வு அருளும் ஷேத்ரபாலபுரம் பைரவர் கோவில்

ஆனந்த வாழ்வு அருளும் ஷேத்ரபாலபுரம் பைரவர் கோவில்

ஷேத்ரபாலபுரம்... இந்த ஊர் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் இருக்கிறது. இங்கு பைரவர் தனித்து அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.

சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அதுமட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள பைரவர் சிரித்த முகத்தோடு தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். இதனால் இவரை ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. முருகன், விநாயகர், செல்லி அம்மன் மற்றும் ஐயப்பனுக்கு சிறு சன்னிதிகள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் பைரவருக்கு அடுத்த முக்கியத்துவம்தான் தரப்படுகிறது. பைரவருக்கு அடுத்து விநாயகர் முக்கியத்துவம் பெற்றுள்ளார். மற்றவர்கள் அதன் பிறகே முக்கியத்துவம் பெறுகின்றனர்.

ஷேத்ரபாலபுரம் மிகச் சிறிய கிராமப் பகுதியாகும். ஆனால் இங்குள்ள கால பைரவர் ஆலயத்தினால் இந்த கிராமம் சிறப்பு வாய்ந்த ஒரு ஊராக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆலயம் மிகப் பெரியது அல்ல என்றாலும், அதிக சக்தி வாய்ந்த ஆலயம் இதுவாகும். அந்த கால சிறிய கட்டிடமாக கோவில் இருக்கிறது. நுழைவு வாசலில் உள்ளூர் பக்தர்கள் சிலரது நன்கொடையால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

காசியில் உள்ள கால பைரவருக்கும் மேலானவர், இங்குள்ள கால பைரவர் என்று கூறுகிறார்கள். ஷேத்ரபாலபுரத்தைத் தவிர காலபைரவருக்கு என தனி ஆலயம் வேறு எங்குமே கிடையாது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். ஆனால் அவருடைய வாகனமான நாய் இல்லாமல், மூலவராக பைரவர் மட்டுமே உள்ள, மூன்று கால பூஜைகளை செய்தவாறு உள்ள தனி ஆலயம் காசியில் கூடக் கிடையாது.

அந்த வகையில்தான் காசி கால பைரவரை விட, ஷேத்ரபாலபுரத்தில் உள்ள ஆனந்த கால பைரவர் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறது. கால பைரவருக்கு என ஏற்படுத்தப்பட்ட இந்த தனி ஆலயம் எழுந்தக் காலம் தெரியவில்லை. ஆனால் மிக மிகப் பழமையான ஆலயம் என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததுமே நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

பைரவரின் தோற்றத்தைப் பற்றிக் கூறப்படும் கதைகளில் இருந்து விலகி, வித்தியாசமான தல புராணத்துடன் உள்ள இந்த ஆலயத்தின் பின்னணிக் கதையை நாமும் அறியலாம். இந்தக் கதை பைரவரின் பிறப்புப் பற்றியக் கதையில் பெரும் மாறுதலானக் கதையாக உள்ளது.

‘ஒருமுறை பிரம்மா பூலோகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஐந்து தலையுடன் இருந்த பிரம்மா பூலோகத்துக்கு வந்து செருக்குக் கொண்டு அனைத்து கடவுளையும் விட தானே சக்தி வாய்ந்தவர் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டார். விஷ்ணுவையும், சிவபெரு மானையும் பழித்தார்.

இப்படி அவர் இருக்கையில் ஒருநாள் பூமிக்கு சிவபெருமான் தனது மனைவி பார்வதி அவர்களுடன் ருத்திரரும் துணைக்கு வந்திருந்தார். அவர்கள் மூவரையும் கண்ட பிரம்மா தன் நிலையை மறந்து தனது ஐந்தாவது தலையினால் ஏற்பட்ட செருக்கால் சிவபெருமானை நிந்தித்தார். இதனால் கோபமுற்ற சிவபெருமான், பிரம்மாவின் அந்த குறிப்பிட்ட தலையைக் கிள்ளி எறியுமாறு ருத்திரருக்கு ஆணையிட்டார். சிவபெருமானின் ஆணையை ஏற்ற ருத்திரரும் உடனடியாக தன்னை பைரவராக உருமாற்றிக் கொண்டு, பிரம்மாவின் ஐந்தாவது தலையை தனது விரல் நகத்தினால் கிள்ளி எறிந்தார். தலையை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார். தன்னை விட்டு விடுமாறு பைரவரிடம் வேண்டிக் கொண்டு அவரை துதிக்கத் தொடங்கினார்.

பிரம்மாவை உயிருடன் விட்டு விட்ட பைரவர், அங்கிருந்து கிளம்பி சிவபெருமானுடன் சென்றார். ஆனால் பிரம்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால், பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரம்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி பைரவர் கையில் ஒட்டிக் கொண்டது.

ரத்த பிட்சை

‘உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ரத்த பிட்சை எடுத்து கையில் உள்ள கமண்டலம் நிறையும் அளவிற்கு ரத்தத்தை நிரப்பிக் கொண்டால் மட்டுமே அந்த சாபம் விலகும்’ என்று சிவபெருமான் அவருக்கு சாப விமோசனத்துக்கான வழியைக் கூறினார்.

ஆகவே பைரவரும் ஒரு கையில் கபாலம், மறு கையில் கமண்டலம் என இரண்டையும் ஏந்திக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து ரத்த பிட்சை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்சை எடுத்து வந்தாலும், கமண்டலத்தில் ரத்தம் நிறையவில்லை என்பதால் வருத்தமுற்று விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணு பகவான், பைரவரிடம், ‘நான் பூலோகத்தில் பத்து அவதாரங்களை எடுக்கப்போகிறேன். ஒவ்வொரு அவதாரத்தின் போதும் எதிரிகளைக் கொன்று, அவர்களது ரத்தத்தை உங்களுக்கு அளித்து கமண்டலத்தை நிரப்புகிறேன்’ என்று உறுதி கூறினார். விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தப் பின் அவர் தங்கி இருந்த இடத்துக்கு பைரவர் சென்றார். அங்கு விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்சையால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் விலகியது.

பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு சாப விமோசனத்தைப் பெற்றாரோ, அந்த இடமே ‘ஷேத்ரபாலபுரம்’ என்று கூறப்படுகிறது. தோஷம் விலகிய பைரவர் அங்கிருந்த ஒரு தடாகத்தில் குளித்தவுடன், அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலம் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அதனால்தான் அந்த தடாகத்தின் பெயர் ‘சூலதீர்த்தம்’ என்றானது.

தடாகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும், அங்கு பால உருவில் விநாயகர் தோன்றினார். ‘இந்த ஷேத்திரம் ஈசனின் பாலகனைப் போலவே, வினைகளை தீர்க்கும் இடமாக அமையும்’ என்று பைரவர், விநாயகப் பெருமானுக்கு அருளினார். அதன் காரணமாகவே இந்த தலத்திற்கு ‘ஷேத்ரபாலபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது என்கிறது தல புராணம்.

காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த ஆலயத்தின் மகிமை பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சனாதன முனிவர்கள் போன்ற பெருமை வாய்ந்த ரிஷி முனிவர்கள் இங்கு வந்து பைரவரை வழிபட்ட காலத்துக்குப் பிறகே, இந்த ஆலயத்தின் பின்னணி தெரிய வந்ததாக புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல பஞ்சபாண்டவர்களும் இங்கு வந்து பைரவரை பூஜித்து உள்ளார்கள்.

ஆலய தீர்த்தங்கள்

இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை ‘சங்கு முக தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருந்ததே. அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது. ஆலயத்தின் இடதுபுறத்தில் உள்ளது, சூல தீர்த்தம் ஆகும். 

அமைவிடம்

ஷேத்ரபாலபுரம் திருத்தலம் மயிலாடு துறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் சென்று ஷேத்ரபாலபுரத்து பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து பத்து அல்லது பதினைந்து மீட்டர் தொலைவில் உள்ள சிறு சாலை பைரவர் ஆலயத்திற்குச் செல்லும் வழியைக் காட்டும்.

No comments:

Post a Comment