Friday, 1 June 2018

அருளை அள்ளித்தரும் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில்

அருளை அள்ளித்தரும் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில்

சோழ நாட்டில் வாழ்ந்த கைவல்யன் எனும் அந்தணன் தரும சிந்தனை மிக்கவன். சுமதி என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வந்த கைவல்யன், நற்குணங்களின் இருப்பிடம். சகல சாஸ்திரங்களையும் நீக்கமறக் கற்றவன். அவனுக்கு புத்திரப்பேறு இல்லாததால் மனம் வருந்தினான். ஒரு முறை அவன் தன் மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். வழியில் அரன் குளம் என்ற இடத்தை அடைந்த அந்த தம்பதியர், அங்குள்ள ஹரதீர்த்தத்தில் நீராடினர். பிறகு கைவல்யன், சிவபெருமானை தியானித்து தவம் புரிந்தான். கடுமையான அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், நேரில் காட்சி தந்தருளி அவன் வேண்டிய வண்ணம் புத்திரப் பாக்கியம் உண்டாக அருள்பாலித்தார்.

இறைவன் திருவருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு நிம்பாரணியன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தான். நிம்பாரணியனைத் தக்கமுறையில் சீராட்டி வளர்த்த கைவல்யன், உரிய பருவத்தில் அவனுக்கு மணம் முடிக்க நினைத்தான். அதற்காக கலாதர் என்பவரின் மகளான சுயம்பிரயைத் திருமணம் செய்து வைத்தான். நிம்பாரணியனும் சுயம்பிரயையும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இன்புற்று வாழ்ந்தனர். கைவல்யனைப் போலவே, நிம்பாரணியனுக்கும் நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

இதையடுத்து தந்தையின் அறிவுரைப்படி, நிம்பாரணியன் ஹரத் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை நினைத்து தவம் இயற்றினான். அவனது கடுந்தவம் கண்டு மகிழ்ந்த ஈசன், அரங்குளத்துக் கரையில் இருந்த வேப்பமரத்தின் அடியில் லிங்க வடிவாய் தோன்றினார். நிம்பாரணியன் அகமகிழ்ந்தான். ‘உன் குலத்தைக் கரையேற்றும் சுப குணம் உள்ளவளாகவும், அழகுடையவளாகவும், மானசீக புத்திரியாகவும் எட்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தையை உனக்களித்து அருள்புரிவோம். அந்தப் பெண்ணை உரிய காலத்தில் உரியவருக்கு திருமணம் செய்து வைத்தால், புத்திரப் பாக்கியத்தைக் காட்டிலும் அதிகமான பலன் கிடைக்கும்’ என்றார் சிவபெருமான்.

அது கேட்டு மகிழ்ந்த நிம்பாரணியன், மீண்டும் ஈசனை பணிந்து, ‘இறைவா! தாங்கள் இதே லிங்க வடிவத்தில் எக் காலத்திலும் இங்கே எழுந்தருள வேண்டும். கயிலையில் வீற்றிருப்பது போல, பூர்ணாம்சத்துடன் திருவருள் பொழிய வேண்டும்’ என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார். அது முதல் இந்த திருத்தலம் ‘திருவரங்குளம்’ என்பது போல, ‘நிம்பாரண்யம்’ என்றும் வழங்கப்படலாயிற்று. இத்தல இறைவனுக்கு ஹர தீர்த்தேஸ்வரர், அரன்குளநாதர், நிம்பாரண்யநாதர் என்ற திருநாமங்கள் உண்டு.

ஒரு முறை திருக்கயிலாயத்தில் ஈசனுடன் வீற்றிருந்த உமாதேவி, ‘சுவாமி! உங்களுக்கு யாரிடத்தில் அதிக அன்பு உண்டு?’ என்று கேட்டார். அதற்கு இறைவன், ‘என் மனையாளாகிய உன்னிடமும், மனோகரமாயுள்ள சந்திரனிடமும், கங்கையிடமும், மிகுந்த அன்பு கொண்ட என் அடியார்களிடமும் எக்காலத்திலும் எனக்கு ஒரு தனியாத அன்பு உண்டு’ என்று கூறினார்.

அதைக் கேட்ட உமாதேவி, மற்றவர்களுடன் தன்னையும் சமமாக கூறியதை நினைத்து கோபம் கொண்டார். துக்கத்துடன் தரையில் படுத்துக் கொண்டார். அவரை சிவபெருமான் இனிய சொற்களால் ஆறுதல் கூறியும் உமாதேவிக்கு சினம் தணியவில்லை.

இதனால் சினம் கொண்ட சிவபெருமான், ‘எனது அன்பான சொற்களை மதிக்காமல், தரையில் படுத்த நீ, பாவ-புண்ணியங்களுக்கு இடமாகிய பூமியில் சென்று பிறப்பாய்’ என்று சாபமிட்டார்.

ஈசனின் சாபத்தைக் கேட்டதும், மனம் தெளிவடைந்த உமாதேவியார், தன்னை மன்னித்தருளும்படி இறைவனை வேண்டினார். இதையடுத்து சிவபெருமான், ‘நீ அஞ்ச வேண்டாம். சாபத்தின் முடிவில் உனக்கு நன்மையே உண்டாகும். நாமே உன்னை மணம்புரிவோம். திருவரன்குளம் என்னும் திருத்தலத்தில் எனது பக்தன் நிம்பாரணியன் மகப்பேறு வேண்டி என்னைத் துதித்துக் கொண்டிருக்கிறான். நீ அவரிடம் சென்று குழந்தையாய் தோன்றுவாய். பின் குழந்தை தன்மையை விட்டு விட்டு, 8 வயது நிரம்பிய சிறுமியாய் மாறி என்னை வணங்கி வா. உரிய காலத்தில் உன்னை நாம் மணம் புரிவோம்’ என்று அருளினார்.

வாக்களித்தபடியே இறைவியான பெரிய நாயகியை, வைகாசி மாதம் சுகிலபட்சத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று சிவபெருமான் திருமணம் புரிந்து கொண்டு, பெரியநாயகி சமேத அரன்குளநாதராக அனைவருக்கும் காட்சி தந்தருளினார் என்கிறது தல புராணம்.

தங்கப் பனம்பழம் :

ஒரு நாள் கல்மாஷபாதன் என்ற மன்னன், அகத்திய முனிவரது அருளுரைகளால் அரன் குளத்தின் பெருமைகளை நன்கு உணர்ந்து தன் குறை நீங்கிப் புத்திரபாக்கியம் பெறும் விருப்பத்துடன் அத்திருத்தலத்தை அடைந்தான். பல இடங்களில் அலைந்து அரிய சிவலிங்கத்தை தேடினான். ஆற்றல் மிக்க அவ்வரசன் பல நாள் தேடியும் சிவலிங்கம் இருக்குமிடத்தை கண்டறிய முடியவில்லை. இருப்பினும் விடாமல் அந்த சிவலிங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த காட்டின் வழியாக ஒரு வேடன், தலையில் ஒரு பெட்டியைச் சுமந்தடி வந்தான். அவனை நெருங்கிய மன்னன், ‘எங்கிருந்து வருகிறாய்? நீ வைத்திருக்கும் பெட்டியில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.

அதற்கு அந்த வேடன், ‘ஐயா... இந்தப் பெட்டிக்குள் பனம்பழம் இருக்கிறது. பட்டணத்தில் உள்ள கடையில் விற்பனை செய்வதற்காக அதைக் கொண்டு செல்கிறேன்’ என்றான்.

அதைக் கேட்ட அரசன், அப்பழத்தைத் தனக்கு தந்தால் தக்கவிலை அளிப்பதாகக் கூறினான். வேடனும் ஒரு குறுணி தானியத்தை விலையாகத் தருமாறு கேட்டுவிட்டு, பெட்டிக்குள் இருந்த பனம்பழத்தை எடுத்து மன்னனிடம் கொடுத்தான். அதைத் தன் கையில் வாங்கிய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில் அந்த பனம் பழம் முழுவதும் தங்கத்தால் பிரகாசித்தது.

அரசன் அந்த வேடனிடம், ‘இந்த பழம் பழுக்கும் பனை மரம் எங்குள்ளது? தினமும் எவ்வளவு பழங்கள் பழுக்கும்? இவ்வளவு காலமாய் யாரிடம் இந்தப் பழங்களை விற்று வருகிறாய்? அஞ்சாமல் உண்மையைக் கூறு. உனக்கு வேண்டிய பொருளை நான் தருகிறேன்’ என்றான்.

‘அரசே! அந்தப் பனைமரம் இக்காட்டில் அருகில் தான் உள்ளது. அதில் தினமும் ஒரு பழம்தான் பழுக்கும். அதனைக் குறுணி தானியத்துக்கு ஒரு வணிகனிடம் விற்று, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். அம்மரத்தை தங்களுக்கு காட்டுகிறேன்’ என்று கூறி அழைத்துப் போனான்.

வேடனுடன் சென்ற மன்னன் பிரகாசத்துடன் மின்னிய அதிசயமான அந்தப் பொற்பனை மரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பின்பு நகரில் இருந்த வணிகனை வரவழைத்து, அவன் அதுவரை வேடனிடம் பெற்றிருந்த பனம்பழங்கள் அனைத்தையும் அவனுக்கு உரிய பொருட்களை வேண்டிய மட்டும் தந்து பெற்றுக்கொண்டான். தொடர்ந்த அந்தப் பொற்பனை மரத்துக்கு மன்னனே காவலாய் இருந்தான்.

ஒரு நாள் அப்பொற்பனை மரத்தில் திவ்ய ஒளி ரூபமாக ஒரு வடிவம் தோன்றி, அரசன் முன்பாக நின்றது. ‘மன்னா! நான் புஸ்பதந்தன் என்னும் கணநாதன். சிவபெருமான் கட்டளையால் கிருதாயுகத்தில் வேம்பாகவும், திரேதாயுகத்தில் காட்டாத்தியாகவும், துபார யுகத்தில் பொற்பனையாகவும் இருக்கின்றேன். கலியுகத்தில் இந்த பொற்பனை மரத்தின் பழங்களால் திரட்டப்படும் திரவியங்களால் அமைக்கப்பட்ட மணி மண்டபங்கள் அமைந்த சிறந்த ஆலயமாக நின்று, இறைவனுக்கு நிழல் தரப்போகிறேன். ஆகையால் எனது இக்கனிகளை விற்றுக் கிடைக்கும் பொருளால் சிவபெருமானுக்கு உகந்த ஆலயம் ஒன்றை விரைவில் கட்டுவாயாக’ என்று கூறி மறைந்தது.

மன்னன் அப்பொற்பனை மரம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு புதிய நகரை அமைத்தான். பின் அங்கேயே தங்கி சிவலிங்கத்தை நேரில் கண்டு தரிசிக்கும் விருப்பத்துடன் இருந்தான். அரண்மனை அலுவலர்கள் பொற்பனைக் காட்டில் தவமிருக்கும் மன்னனுக்குத் தேவையான பூஜை திரவியங்களையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து இடையர்கள் சிலர் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்படி இடையர்கள் வரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி, அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் பூஜை பொருட்கள் ஒரு கல்லின் மீது விழுவது வழக்கமாகிப்போனது. இந்தச் செய்தி மன்னனுக்கு தெரியவந்தது.

மன்னன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சித்தான். அப்போது வாள் பட்டு கல்லில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் தான் அது சிவலிங்கம் என்பது தெரியவந்தது. பதறிய மன்னன், தன் தவறுக்காக உயிரை விட முன்வந்தான். அப்போது இறைவன், மன்னனை தடுத்தாட்கொண்டு, அங்கே ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். கல்மாஷபாதன், இறைவன் ஆணைப்படி மிகச்சிறந்த திருக்கோவிலை எழுப்பி, குறித்த நன்னாளில் குடமுழுக்கு விழாவையும் நடத்தினான்.

மற்றொரு வரலாறு :

இது போல இன்னொரு புராண வரலாறும் உண்டு. இடையர் ஒருவர் தினந்தோறும் பால் கொண்டு வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுமாறி, கலயத்திலிருந்து பால் கொட்டிப் போகும். அதோடு கலயமும் உடைந்துவிடும். இவ்வாறு பால் கொட்டிப் போவதைக் கண்ட பால்காரர், அவ்விடத்தில் கரடு முரடாக இருந்த பகுதியைத் தூய்மை செய்யவேண்டும், ஒழுங்கு படுத்தவேண்டும் என்று மண் வெட்டி, கோடரி போன்ற கருவிகளுடன் வந்தார். 

அங்கிருந்த கற்களை பெயர்த்த போது, ஒரு கல்லைக் கண்டார். அக்கல்லே தன்னைத் தினமும் தடுக்கிவிழச் செய்து பாலைக் கொட்டும்படி செய்துவிட்டதாக எண்ணிய அவர், கல்லை அடியோடு தோண்டி எடுக்க நினைத்து மண்வெட்டி கொண்டு வெட்டினார். அப்போது மண்வெட்டி பட்டு, கல்லில் இருந்து ரத்தம் பாய்ந்தோடியது. அப்போது அங்கே வந்த ஒருவர், தன்னிடம் இருந்த துண்டை போட்டு ரத்தத்தை தடுத்துள்ளார். பின்னர் அங்கு இறை வனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

ஆதிசேஷன் வழிபட்ட தலம் :

காசியப்பர் எனும் முனிவருக்கு விநதை, கத்ரு என இரு மனைவியர், கத்ரு மிகப் பயங்கரமான விஷம் பொருந்திய நாகங்களை புதல்வர்களாகப் பெற்றாள். விநதையிடம் அருணன், கருடன் எனும் புதல்வர்கள் மகாவிஷ்ணு அம்சமாய் தோன்றினர். தேவலோகத்தின் உச்சை சிரவஸ் எனும் வெண்குதிரை நிறம் பற்றிய பிரச்சினையால் விநதைக்கும் கத்ருவுக்கும் தீராப் பகை தோன்றியது. அதனால் நாகங்களுக்கும் கருடனுக்கும் கூட பகை மூண்டது. பாம்புகளின் அரசனாக ஒளி பொருந்திய நாகரத்தினங்களை கொண்ட ஆயிரம் முடிகளுடன் விளங்கும் ஆதிசேஷன், தன் குலத்தாருக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தீர்க்க உறுதி கொண்டார். 

ஆதிசேஷன் அரன் குளத்தை அடைந்து, தென்புறத்தில் மாசில்லாத தீர்த்தம் ஒன்று உண்டாக்கி, அதில் நீராடி அரன்குளநாதரை வழிபாடு செய்தார். அரன்குளநாதர் ஆதிசேஷன் முன் எழுந்தருளி ‘உனது வேண்டுதலை நான் அறிவேன். உன் அன்னையின் சாபமும், கருடனது பகையாகிய பயமும் உனக்கு வேண்டாம். பாம்புகள் எமக்கு அணி ஆவார்கள். நீ எனது ஆணையால் பூமியைச் சுமக்கும் பேறு பெறுவாய்’ என்று அருளினார். அதன்படியே ஆதிசேஷன் தன்னுடைய குறைகள் நீங்கி உயர்வு பெற்றார். 

அமைவிடம் :

இந்த ஆலயம் பூரம் நட்சத்திற்குரிய கோவிலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர பிறந்த நாள், மாதாந்திர நட்சத்திரநாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கே வந்து வழிபடலாம். இங்கு அம்பாள் சன்னிதி முன்பாக இருக்கும் சக்கரத்தில் உட்கார்ந்து தங்களது வேண்டுதல்களை வைக்கலாம்.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் உள்ளது. அங்கே இறங்கியவுடன் நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.

No comments:

Post a Comment