Saturday 4 November 2017

ஆனை வடிவில் அருளிய ஐங்கரன்

Image result for vinayagar

பல ஆண்டுகளாக அந்த விநாயகர் கோயிலில் பூஜை  செய்து வந்த அர்ச்சகர் அவர். தன் தாத்தா காலத்திலிருந்து விநாயகருக்கு செய்யும் சேவையால் கிடைக்கக் கூடிய பலன்களை வைத்தே குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவரை வறுமை வாட்டத் தொடங்கியது. மிகவும் வருத்தப்பட்ட அவர், ஒரு கட்டத்தில், வேறு ஏதாவது வேலை தேடிக்கொள்ள முடிவு செய்தார். நான்கைந்து தலைமுறைகளாக பூஜை, அபிஷேகம், அலங்காரம் எனச்செய்து அழகுபார்த்த கணபதியை விட்டு நீங்குகிறோமே என்ற வேதனையில் அர்ச்சகருக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஆனால் அதிகாலை நேரத்தில் தூக்கம் அசத்தியது. அச்சமயம் ஒரு கனவு. ஒரு யானை தும்பிக்கையில் பூச்சரத்தை ஏந்திக்கொண்டு சுற்றி சுற்றி வருகிறது. 

இவ்வாறு பலமுறை சுற்றி வந்த யானை, விநாயகர் தலையில் அந்தப் பூச்சரத்தை வைத்து விட்டு அர்ச்சகரை ஆசீர்வதித்தது! இப்படியொரு கனவுக்குப் பிறகும் அந்தக் கோயிலை விட்டு விலகி வேறு வேலைக்குப் போக அர்ச்சகர் விரும்புவாரா என்ன? இனிமேல் எந்த கஷ்டம் வந்தாலும், இறுதிவரை இந்த விநாயகர்தான் கதி என்று தீர்மானித்துக்கொண்டு, வழக்கம்போல பூஜைகளைத் தொடங்கி விட்டார். ஆசீர்வதித்த கணபதி அமைதியாக இருப்பாரா? தன் பக்தர் பட்ட கஷ்டமெல்லாம் போதுமென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது! அடுத்த இரண்டு நாட்களில் அந்த அதிசயம் நடந்தது. 

சுங்கத் துறையில் உயரதிகாரியாக பொறுப்பேற்றிருந்த ஒருவர் பழத்தட்டோடும் பணக்கட்டோடும் அந்தக் கோயிலுக்கு வந்தார். வேலை கிடைக்க வேண்டும் என்று இந்த விநாயகரை வேண்டிக்கொண்டு, 48 நாட்கள் விரதம் இருந்து கோயிலை வலம் வந்த தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி, தன் வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்தார். அன்று அந்த அர்ச்சகருக்கு அள்ளிக் கொடுக்கத் தொடங்கிய விநாயகர், இன்றுவரை குறைவின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்தால் வேலை கிடைப்பது உறுதி என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை. 

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சித்தி விநாயகர் திருக்கோயில். விநாயகருடன் ஆஞ்சநேயர், ஸ்ரீசனீஸ்வர பகவான் சந்நதிகளும் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment