Saturday 10 February 2018

உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் எங்குள்ளது தெரியுமா ?

sravanabelagola_1

உலகிலேயே மிக உயரமான, பிரம்மாண்டமான ஒற்றைக்கல் சிற்பம் எங்குள்ளது என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும். 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் புகழ்பெற்ற சரவண பெலகோலா புண்ணிய ஸ்தலம் உள்ளது. இங்கு தான் பிரம்மாண்டமான பாஹுபலி (கோமதேஸ்வரர்) சிலை 17 மீட்டர் (58 அடி) உயரத்தில் ஒற்றைக்கல் மஹாசிற்பம் உள்ளது. இது, உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் என்ற புகழைப் பெற்றுள்ளது. 

பார்க்கும் யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அபாரமான சிற்பக்கலை அம்சத்தையும் வரலாற்று கம்பீரத்தையும் இந்தச் சிலை பெற்றுள்ளது. முதல் முறை இந்தச் சிலையை பார்ப்பவர் யாவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இதன் கம்பீரமும் காட்சியும் உள்ளது. இந்தச் சிலை கங்க ராஜவம்ச மன்னரான ராஜமல்லா மற்றும் அவரது தளபதி சாமுண்டராயாவால் எழுப்பப்பட்டுள்ளது. 

இந்தக் கோயிலில் கன்னடம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக் குறிப்புகளை காணலாம். இந்தக் குறிப்புகளில் கோமதேஸ்வரர் சிலையை உருவாக்கிய மன்னர் மற்றும் அவரது தளபதி ஆகியோரின் முயற்சிகளைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான வரலாற்று ஆவணமாகும். 

இந்தப் பிரம்மாண்ட ஒற்றைக்கல் சிற்பம் யார் என்று தெரியுமா? 

சமண ஞானியான கோமதேஸ்வரர். இந்தச் சிலை உள்ள ஸ்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தாபிஷேக விழா நடைபெறுகிறது. அதன்படி இவ்வாண்டுக்கான விழா வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சிலைக்கு வரும் 17-ம் தேதி மகா மஸ்தாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

மஹா மஸ்தாபிஷேகம் என்றால் என்ன?

சரவண பெலகோலாவின் பிரதான அம்சமான இந்த கோமதேஸ்வரர் சிலையை அனைவரும் அவசியம் காணவேண்டிய ஒன்றாகும். இந்த மஹா மஸ்தாபிஷேகம் என்பது கோமதேஸ்வரர் சிலைக்கு அபிஷேகம் செய்விக்கப்படும் ஒருவித சடங்கு ஆகும். 

அந்த நாளில் கோமதேஸ்வர சிலைக்கு குங்குமம், நெய், பால், தயிர், தங்க நாணயங்கள் உள்ளிட்ட புனிதப்பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சாதுக்கள், குருமார்கள், ஆச்சாரியார்கள், சமண தியாகிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

No comments:

Post a Comment