Saturday 3 February 2018

ஆர்வத்தைத் தூண்டும் அமானுஷ்ய சக்திகள்

ஆர்வத்தைத் தூண்டும் அமானுஷ்ய சக்திகள்

ஆவிகள் பற்றி மனதில் பயம் இருப்பவர்கள் பங்குனி சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் அம்மையாரை, திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கலாம்.

அமானுஷ்ய சக்திகள் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு. குறிப்பாக, மரணத்துக்கு பின்னர் என்னதான் ஆகிறது..? என்பதை அறிந்து கொள்ள மனித குலம் இந்த நூற்றாண்டு வரையில் முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. மகான்களின் கருத்துப்படி மரணத்தின் மூலம் உடலின் மீதான தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, உடல் சம்பந்தப்பட்ட அனைத்துவித உறவுமுறைகளும் அறுபட்டு விடுகின்றன. காரணம் முந்தைய பல்வேறு பிறவிகளின் உறவுகள் உள்ளிட்ட சகல தொடர்புகளும் சம்பந்தப்பட்ட உடலை விட்டு பிரிந்த நபர் (உடல் தொடர்பு அறுந்த பிறகு ஆண், பெண் வித்தியாசங்கள் இல்லை), அடுத்த கட்ட நகர்வுகளை வழிநடத்தும் இயற்கையின் பெருவிதிகளுக்கு ஆட்பட்டு செயல்படவேண்டியதாக ஆகி விடுகிறது.

ஆனால், வாழும் காலத்திலேயே ஒரு பெண் அடியவர், தனது அழகிய பெண் உருவத்தை பேய் வடிவமாக மாற்றிவிடும்படி இறைவனிடம் இறைஞ்சிய நிகழ்வு நமது ஆன்மிக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்ட புனிதவதியின் மேன்மையை உணர்ந்து அவரது கால்களில் கணவர் விழுந்து ‘தெய்வம்’ என்று கூறிய காரணத்தால், அவர் சிவபெருமானிடம் பேய் உருவம் வேண்டி நின்றார். அவர் வேண்டியபடியே எலும்புக்கூட்டை உடலாகப் பெற்றார்.

சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் ‘பேயார்’ என்று திலகவதி என்ற காரைக்கால் அம்மையாரை குறிப்பிடுகிறார். அம்மையார் இயற்றிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும், அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளிலும் தம்மை ‘காரைக்கால் பேய்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

பேயாக வடிவம் எடுத்த காரைக்கால் அம்மையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாகவே நடந்து சென்றார். அப்போது சிவபெருமானால் அவர் ‘அம்மையே..’ என்று அழைக்கப்பட்டார். ‘என்ன வரம் வேண்டும்..?’ என்று சிவபெருமான் கேட்டதற்கு, ‘பிறவாமை வேண்டும்.. அப்படி பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்’ என்று கேட்டார். இறைவன் அப்படியே அருள் செய்தார். பிறகு திருவாலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், அங்கும் தலைகீழாகவே நடந்து சென்று தரிசனம் செய்தார்.

அப்போது சிவபெருமான், ‘தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற்றிருப்பாயாக’ என அருளினார். காரைக்கால் அம்மையாரின் புனித சரித்திரத்தில் இருந்து, பேய்கள் தெய்வத்தன்மை பெற்று இறைவனுடன் ஐக்கியமானவர்களையே நினைவுபடுத்துவதாக கொள்ளலாம்.

ஆனால், பேய் அல்லது ஆவிகள் பற்றிய சிலரது அனுபவங்கள் முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டதாக இருக்கின்றன. அவற்றில் கவிஞர் கண்ணதாசன் ஆவிகள் மற்றும் தேவதைகள் பற்றி தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமான ஒன்று.

அந்நூலில் அவர், “இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து கொள்வது அல்லது வேறு உடல்களை மீடியமாகக் கொண்டு பேசுவது உண்டு. எனக்கும் இதில் அனுபவம் இருக்கிறது. 1941-ம் ஆண்டு என்னுடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. 

அந்தப் பெண்களில் மூத்த பெண்ணிடம் என் சகோதரி ஆவி பேசுவது வழக்கம். ஏதாவது முக்கியமான பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, ஏன் சகோதரியின் ஆவி தன் மகளின் உடல் மூலம் பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன். சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்று அழைக்கும் அந்தப் பெண், ஆவி வந்து பேசும்போது என்னை, ‘தம்பி’ என்று பழைய உறவு முறைப்படி அழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அந்த உறவு முறைப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். பல முறைகள் இதுபோன்ற சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். மேலும், ஆவியாக எனது அக்கா வந்து சொன்ன விஷயங்கள் நடந்தும் இருக்கின்றன” என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

அமானுஷ்யமான ஒரு சம்பவம் நடப்பதற்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது சம்பந்தப்பட்ட நபர், இரண்டாவது குறிப்பிட்ட நேரம், மூன்றாவது குறிப்பிட்ட இடம். மேற்கண்ட மூன்று விஷயங்களும் சந்திக்கும் நிலையில் நல்லதாகவோ, கெட்டதாகவோ அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறுவதாக பல ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக ஒருவரது தைரிய ஸ்தானமான மூன்றாம் இடம் பாதிக்கப்பட்டு, வலுவாக இல்லை என்றால் மனதில் ஏற்படும் வெவ்வேறு குழப்பங்கள் காரணமாக வித்தியாசமான தோற்றங்களைக் காண நேரிடலாம். சந்திரன் தனது பலத்தை இழந்துள்ள நிலையில், பாவ கிரகங்களும் அதை பார்த்திருந்தால் மன பலவீனம் காரணமாக இரவு நேரங்களில் அமானுஷ்யமான தோற்றங்களை காணும் சூழ்நிலைகள் உண்டாகலாம் என்றும், மேற்கண்டவை தவிர மாந்தியின் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்றும் ஜோதிட நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.

அவ்வாறு பேய் அல்லது ஆவிகள் பற்றி மனதில் பயம் இருப்பவர்கள் தமிழ் மாதமான பங்குனியில் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாளில் குருபூஜை காணும் பேய் உரு கொண்ட காரைக்கால் அம்மையாரை, திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கலாம். மேலும், அங்கு கோவில் கொண்டுள்ள ஆடலரசனையும் வணங்குவதோடு, அங்கு இருக்கும் மந்தனாகிய சனியின் புதல்வன் மாந்தியையும் வணங்கினால், ஆவி மற்றும் பேய் பற்றிய பயம் பற்றும் அந்த அனுபவங்கள் அகலும் என்றும் ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment