Friday, 20 April 2018

25 அடி உயர பிரம்மாண்ட கிருஷ்ணர்


காஞ்சிபுரம் திருப்பாடகம் பாண்டவதுாதப் பெருமாள் கோயிலில் மூலவர் கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். ரோகிணி நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் பிரச்னை நீங்கும். 

தல வரலாறு

கிருஷ்ணர் பாண்டவர் களுக்காக ஐந்து வீடுகளையாவது பெற்றுத் தரும் நோக்கத்துடன், துரியோதனனிடம் துாது சென்றார். துரியோதனன், பாண்டவர்களின் பெரிய பலமாக விளங்கும் கிருஷ்ணரை அவமானப்படுத்த நினைத்தான். துாது சென்ற அவர் அமர்வதற்காக இருந்த ஆசனத்தின் அடியில், ஒரு பெரிய நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளைமூடி மறைத்தான். கிருஷ்ணர் அமர்ந்ததும், திட்டமிட்டபடி ஆசனம் நிலவறைக்குள் விழுந்தது. அவரை தாக்க அங்கு வந்த மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணர், விஸ்வரூபமெடுத்தார். 

பின்னாளில், அர்ஜூனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயன் மகாபாரத கதையை வைசம்பாயன முனிவரிடம் கேட்க நேர்ந்தது. அப்போது மகாராஜா, கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை தானும் தரிசிக்க எண்ணி அதற்கான வழியைக் கூறும்படி வேண்டினார். ரிஷியின் வழிகாட்டுதலின்படி, இத் தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கினார். அப்போது நேரில் தோன்றிய கிருஷ்ணர் விஸ்வரூபமாக காட்சி தந்தார். அவரே பாண்டவதுாதப் பெருமாளாக இங்கு அருள்பாலிக்கிறார். 

25 அடி உயர கிருஷ்ணர்

மூலவர் கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். சத்தியபாமா, ருக்மணி இருவரும் உடனிருக்கின்றனர். மத்ஸ்ய தீர்த்தம் இங்குள்ளது. இத்தலத்தின் புராணப்பெயர் திருப்பாடகம் என்பதாகும். பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாசுரம் பாடிஉள்ளனர். 108 திவ்ய தேசங்களில் 49 வது தலம் இது. கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வ பாதயோக சக்திகளை கொண்டு அருள்வதால், இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப் பிரதட்சணம் செய்வோருக்கு எல்லா நரம்புகளும் பலம் பெறும்.

துாத ஹரி

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு துாதுவராக சென்றதால் பாண்டவ துாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுகளில் 'துாத ஹரி' என குறிக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து, தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இங்கு காட்டியருளினார். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி நாட்களில் தரிசிப்பது சிறப்பு. அருளாளப் பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், எம்பெருமானார், மணவாள மாமுனிகள்ஆகியோருக்கும் சன்னதி உள்ளது. 

ரோகிணி வழிபாடு

நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, கிருஷ்ணரை பூஜித்து, சந்திரனை மணந்து கொள்ளும் பாக்கியம் பெற்றாள். ஞான சக்தி கொண்ட ரோகிணி, அக்னி சக்தி கொண்ட கார்த்திகை இருவரையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை சந்திரன் மணந்தார். ஞான சக்தி அளித்த கிருஷ்ணருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ரோகிணி, தினமும் சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். 

எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 044 - 2723 1899

No comments:

Post a Comment