இறைவனது திருநாம கீர்த்தனம் உள்ளிட்ட புண்ணியச் செயல்களால் பாவங்கள் நசித்துவிட, செய்த புண்ணியங்களும் இறைவனிடம் சேர்ந்துவிட, "இருவினை' என்னும் மாயையினை அந்த ஜீவன் எளிதில் கடந்து, உடலை விட்டு உயிர் நீங்கும் கட்டத்தில் மோட்ச நிலையைப் பெற்றுவிடுகிறது.
இந்தப் பேரின்ப நிலையை அடையத்தான் பலவிதமான புண்ணியங்களை ஆற்றுமாறு நமது பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானது அன்னதானம். வறுமை நோயால் பீடிக்கப்பட்டு பசித்தவர்களுக்கும், உடலால் உழைத்து உண்ண முடியாதவர்களுக்கும், ஆதரவற்றோர்க்கும், குறிப்பாக இறையடியார்களுக்கும் செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியச் செயலாகும். இதனால் ஏற்கெனவே நாம் செய்த பாவங்களும் தீரும். "அன்ன தானம்' என்றால் நூற்றுக் கணக்கானவர்களுக்கோ, ஆயிரமாயிரம் பேருக்கோ சோறிட வேண்டுமென்பது இல்லை. உள்ளார்ந்த அன்போடு நமது வசதிக்கேற்ப ஒரு கைப்பிடி சோறோ- அரைக் குவளைக் கஞ்சியோ கொடுத்தாலும் அது உயர்ந்த தானமே! இதில் ஐயம் வேண்டாம்.
ஆனால் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பதைத்தான். "அன்ன தானம்' என்று தம்பட்டம் அடித்து, தகுதியற்றவர்களுக்கு (மதுவருந்துபவர்கள், அங்கஹீனம் இல்லாதிருந்தும் உழைக்கப் பிடிக்காத சோம்பலுடையோர், சாப்பிட்ட தெம்பில் திருடப் போகிறவர்கள், இறைவனை ஏசுபவர்கள் போன்றோருக்கு) செய்கின்ற அன்னதானத்தினால் எந்தப் பயனும் இல்லை. தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை... எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!
புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!
அன்னதானத்துக்கு ஏன் "சித்ரா பௌர்ணமி' திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்...? காரணம் உள்ளது. அது "சித்திரகுப்தன்' என்ற தேவனின் பிறந்த நாள். "படங்களைச் சேகரிப்பவன்' என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.
சித்திரகுப்தன் வெளியிடும் தகவல்களுக்கேற்ப, அவனது தலைவனாகிய யமன், அந்த ஜீவனுக்கு தண்டனைகளை விதிப்பான்; ஏனைய யம கிங்கரர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள். "சித்ரா பௌர்ணமி' என்றாலே சித்திர குப்தனின் நினைவும், "பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்' என்ற உணர்வும் அனைவர்க்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக "அன்ன தானம்' செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் "சித்ரா பௌர்ணமி' தினத்தை, "அன்ன தானத்துக்கு உகந்த நாள்' என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.
"ராஜ சேகரன்' என்ற சோழ மன்னன், சித்ரா பௌர்ணமி தினத்தில் சிவனடியார்களுக்கு அன்னதானம் அளிக்க "பூதானம்' செய்த விவரங்களை திருச்சி நெடுங்களத்திலும், மலைக்கோட்டையிலும் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். இது, அன்னதானத்துக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள தொன்மைத் தொடர்பை உணர்த்துகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.
தனது குருவான பிரஹஸ்பதியை அவமதித்த பாவத்தை நீக்கிக்கொள்ள பூவுலகு வந்த தேவேந்திரன், சித்ரா பௌர்ணமி இரவில்தான் ஒரு கதம்ப வனத்தில் சொக்கலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தான். அந்தச் சிவலிங்கத்துக்கு பொற்றாமரையால் அர்ச்சனை செய்து, நிவேதனம் படைத்து, சிவ தியானத்தில் மூழ்கியிருந்ததால் அவனது பாவங்கள் நீங்கின; அவனது உடலும் முன்புபோல் பொன்னிறம் பெற்றது! இந்தத் தலமே தற்போது "மதுரை' எனப்படுகிறது. ஆக அன்னதானத்தோடு, சிவ பூஜையையும் சித்ரா பௌர்ணமியன்று செய்வதால் மகா பாதகங்களும் தீரும் என்பது தெளிவாகிறது.
ஆனால் காலப் போக்கில் "சித்ரா பௌர்ணமி' என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்து கொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் "நமக்கு நாமே' தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு "சித்ரான்னம்' என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.
இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன் கை கட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, "சிவ, சிவ' என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்' ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?
இந்தாண்டு சித்ரா பௌர்ணமி நாளை 29.04.2018 அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment