சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை, நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பகுதி. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயில். திரும்பிய திசையெல்லாம் பசுமை மிளிர, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில்2,600 அடி உயரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. ‘‘நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. எம்பெருமாள் தங்கியிருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள் முதன்மையானது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகிறது.
பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் இந்த மலையின் சிறப்பு தெளிவாக விளக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கமன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் சில பகுதிகள் கட்டப்பட்டது’’ என்கிறது தலவரலாறு. மலையடிவாரத்தில் பாதமண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன.
உச்சிக்கு சென்று வரதராஜரை வழிபட 3360 படிகளை கடந்து செல்ல வேண்டும். பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். அவரை வணங்கிய பின்னரே பக்தர்கள் படியேற துவங்குகின்றனர். மலைஉச்சியின் முகப்பில் கோயிலின் பெரிய மண்டபமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், மண்டபம் விசாலமாக பரந்து கிடக்கிறது.
திருமடைப்பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. உபய வரதராஜ பெருமாளின் கோயிலுக்கு வலப்புறம், பாறையில் வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து கம்பீரமான எம்பெருமாள் வரதராஜ பெருமாள் சன்னதியை மலையின் உச்சியில் காணலாம்.
மூலவராக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பமும் உள்ளது.
தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யும் போதெல்லாம் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சன்னதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்று 5 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதிக்கு இணையான வரதராஜப் பெருமாளை படியேறி வழிபட்டால் வளமும், நலமும் பெருகும். மனித வாழ்க்கை சுபிட்சமாகும் என்பது ஆண்டாண்டு காலமாய் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை.
No comments:
Post a Comment