Monday, 30 April 2018

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கான புராணக்கதைகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கான புராணக்கதைகள்

கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணவும், சீதனம் கொடுப்பதற்காகவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். 

ஆனால் அவர் வந்து சேரும்முன்பே திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வராமல் வண்டியூர் வழியே மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு புராணக்கதை.

மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவ ரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், இன்னொரு அடியை விண்ணிலும், மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார். இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது அங்கிருந்த பிரம்மா அது தன் தந்தையின் கால் என்பதை அறிந்து அதற்கு பாதபூஜை செய்கிறார். 

பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர்மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 

இத்தகைய புகழ்மிகு நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை. அவர் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு சற்று நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபம் அடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம்(தவளை) ஆகும்படி சாபமிட்டார்.

உடனே சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி (சித்ரா பவுர்ணமி) தினத்திற்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு (சுதபஸ்முனிவர்) சாபவிமோசனம் அளித்தார் என்பது மற்றொரு புராணக்கதை.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பின்னர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார். அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளழகரின் சக்கரம், பஞ்சாயுதங்கள்

அழகர்கோவிலில் எங்கும் இல்லாத சிறப்பாக கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடம் இருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள். 

No comments:

Post a Comment