Thursday 26 April 2018

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை

sketch-1524564375508

அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார். ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களைக் கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வருமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார். உரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார். நவக்கிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன. உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. நவகைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது "இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்" ஆகும். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது. இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி 2008-ம் ஆண்டில் பூமி பூஜை செய்து, 2010-ம் ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர். திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர். இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத்தடை போன்றவற்றுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும். இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும். நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.

திருச்செந்தூரிலிருந்து - குரும்பூர் - ஏரல் பாதையில், கைலாசநாதர் ஆலயம் புதியதாய் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாலயத்திற்கு இராஜ கோபுரம் எழுப்ப வேண்டும் என்பதை உணர்ந்த, கைலாசநாதர் திருக்கோயில் தலைவர் குரு பாலசுப்பிரமணியம் அவர்களால், கோவில்பட்டி "கைலாஷ் டிரஸ்ட்" ஏற்படுத்தப்பட்டு, திருக்கோபுரப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபுரம் உயர்வதற்குப் பொருளாதாரம் கருதி பொதுமக்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும், சிவனடியார்களிடமிருந்தும் உபயம் பெறப்பெற்று வரப்படுகிறது. உபயமும் வந்து சேர்ந்த வண்ணம், ஈசன் அருளிக் கொண்டிருக்கிறான். இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு  
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி - 628 501
தூத்துக்குடி மாவட்டம்.
தொலைபேசி  98422 63681

No comments:

Post a Comment