Wednesday 25 April 2018

நீயும் சிவம்! நானும் சிவம்!


இளைஞன் ஒருவனுக்கு, 'எல்லாம் சிவமயம் என்பது உண்மையா?' என்ற சந்தேகம் எழுந்தது. கங்கை கரையில் இருக்கும் சாதுக்களிடம் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். 

அங்கிருந்த ஒரு சாது,''பிரம்ம ஞானியான ஏகநாதரிடம் செல். அவரை சந்தித்தால் தெளிவு கிடைக்கும்''என்றார். ஏகநாதரை காண இளைஞன், ஒவ்வொரு சிவன் கோயிலாக ஏறி இறங்கினான். அவர் தென்படவில்லை. 

நண்பகல் ஆனது. கடைசியாக இளைஞன் சோர்வுடன் ஒரு கோயிலுக்குள் நுழைய, அங்கு சிவலிங்கத்தை நோக்கி, கால் நீட்டியபடி ஏகநாதர் துாங்கக் கண்டான். ''சிவனை அவமதிக்கும் இவரா பிரம்மஞானி'' என திகைத்தான். இருந்தாலும், அவர் விழிக்கும் வரை காத்திருந்தான். சிறிது நேரத்தில் ஏகநாதர் எழுந்ததும் இளைஞன், ''ஞானிகள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லவா கண் விழிப்பர்? நீங்கள் நண்பகல் வரை துாங்குகிறீர்களே....''என கேட்டான்.

''எனக்குள் இருக்கும் பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) துாக்கம் வரும் போது துாங்கினேன். விழிப்பு வரும் போது விழித்தேன்.பிரம்மம் விழிக்கும் நேரம் தானே பிரம்ம முகூர்த்தம்''என்றார் ஏகநாதர். ''அதுவும் சரியே... லிங்கத்தை நோக்கி கால் வைத்து அவமதிக்கிறீர்களே.....'' என்றான் இளைஞன். 

''சிவன் இல்லாத இடமே உலகில் ஏது.... எல்லாம் சிவமே. நீயும், நானும் சிவம் தான். யாராலும் அவரை அவமதிக்க முடியாது''என்றார். எல்லாம் சிவமயமாக காண்பவரே ஞானி என்பது இளைஞனுக்கு புரிந்தது.

No comments:

Post a Comment