திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.
குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்.
சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.
பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.
இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது.
இந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது.
அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.
சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார்.
‘மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’
என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார்.
திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி
அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.
சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ஆம்! ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுதபாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர்.
மந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி பட்டுச் சென்றாளாம் மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வநாதன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார்.
இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங்கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர்.
இவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரியுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.
இரண்டு அம்மன்கள்
திருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள்.
முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment