நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.
பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.
குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.
நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.
எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
பொதிகை மலையில் அகத்தியரை வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.
தஞ்சை பெரிய கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை “சித்தர் பெருவிழா” என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.
சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள்.
சதுரகிரியில் இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் அன்னதானம் கொடுக்கிறார்கள். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும்.
சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும்.
16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர். எனவே சதுரகிரியில் எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் அருகே 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.
அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும்.
நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவி லில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆலயங்களில் மட்டுமின்றி ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.
சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு காலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.
உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் சித்தர்களின் அருளை பெற முடியும்.
No comments:
Post a Comment