அரியலூர் மாவட்டத்தில், ராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை போன்று வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு சிவாலயங்கள் கட்டப்பட்டு, தமிழர்களின் கட்டிட கலைக்கு பறை சாற்றும் விதமாக இக்கோவில்கள் சான்றாக திகழ்ந்து வருகின்றன. அதேபோன்று திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரம் பாடப்பெற்ற கீழப்பழுவூர் ஆலந்துறையார், திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி, கோவிந்தபுத்தூர் கங்காஜடேஷ்வரர் போன்ற கோவில்கள் சிறந்த வழிபாட்டு தலங்களாக விளங்குகின்றன.
அந்த வரிசையில், அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில், சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் உள்ளது. கடந்த 1941-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும், கோவில் நடையும் சரிவர திறக்காமல், வழிபாடே செய்ய முடியாமல் பெரும்பாலான நாட்களில் கோவில் பூட்டியே கிடந்தது.
இதனால் கோவில் சிதிலமடைந்து, முட்புதர் மண்டி கிடந்தது. இந்த நிலையில், இக்கோவிலை புதுபித்து, கும்பாபிஷேகம் விழாவை நடத்தியே தீர வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம நாட்டாண்மைகள் முன்னின்று கும்பாபிஷேக பணிகளை துரிதப் படுத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 19-ந் தேதி அன்று கோவிலின் கட்டிட பணிகளை பார்ப்பதற்காக காரைக்குறிச்சியை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 6 மணியளவில் சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த அரிய காட்சியை கண்ட பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த செய்தியை அறிந்து பக்தர்கள் கூட்டமாக வந்து இறைவனை தரிசித்தனர். அதன்பிறகு தொடர்ந்து அதிகாலை வேலையில் சூரிய உதயத்தின் போது லிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்ட வண்ணம் இருந்து வந்த நிலையில் நேற்றும் இந்த அபூர்வ காட்சி தென்பட்டது.
தா.பழூரை சேர்ந்த சிவனடியார்கள் சிவமுருகன், சிவ நடராஜன் ஆகியோர் திருப்பள்ளியெழுச்சி, பஞ்சபுராணம், சிவபுராணம் ஆகிய நால்வர் இயற்றிய திருமுறை பதிகங்களை பாடினர். கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் சிவாய நம, சிவசிவ என பக்தி கோஷங்கள் எழுப்பி இறைவனை வழிப்பட்டனர். காரைக்குறிச்சி சிவன்கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வகாட்சி இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தெரியும் என கூறப்படுகிறது. சூரிய உதயத்திற்கு முன்னதாக கோவிலுக்கு வந்து சூரிய ஒளியோடு இறைவனை தரிசிப்பது மிகுந்த விஷேசமாகும்.
No comments:
Post a Comment