Monday 30 April 2018

'ஸ்கூல் அட்மிஷனா...' இங்கே வாங்க...


பள்ளியில் சேர்க்க தயாராக இருப்பீர்கள். அதேநேரம் பிள்ளைகளை படிக்கவும் தயாராக்க வேண்டாமா... அதற்கு நீங்கள் அனுமதி பெற வேண்டிய தலம் தஞ்சை மாவட்டம் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில். 

அரண்மனை கணக்கராக இருந்த சுதன்மன் எழுதிய கணக்கில், சோழ மன்னருக்கு சந்தேகம் எழுந்தது. கணக்கை சரியாக காண்பித்தும், மன்னர் ஏற்கவில்லை. 

கவலைப்பட்ட சுதன்மன், சிவபெருமானிடம் முறையிட்டார். இரக்கம் கொண்ட சிவன், கணக்கரின் வடிவிலேயே அரண்மனைக்கு சென்றார். மன்னரின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டு மறைந்தார். இதை அறியாத சுதன்மன், மன்னரைக் காண வந்தார். 

மீண்டும் கணக்கர் ஏட்டுடன், வருவதைஅறிந்த மன்னர், '' சுதன்மரே! கணக்கு தான் சரியாகி விட்டதே, மீண்டும் ஏன் வந்தீர்கள்?'' எனக் கேட்ட பிறகே உண்மை புரிந்தது. கணக்கர் வடிவில் இறைவனே வந்து சந்தேகம் தீர்த்ததை எண்ணி மன்னர் நெகிழ்ந்தார். சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார். 

இதன் பின்னணியில், சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டு, 'எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என திருநாமம் சூட்டப்பட்டது. 'அட்சரம்' என்றால் 'எழுத்து'. சுவாமிக்கு 'தான்தோன்றீயீசர்' என்றும் பெயருண்டு. அகத்திய முனிவருக்கு சிவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. சுகந்த குந்தலாம்பாள், நித்திய கல்யாணி என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. சூரியனுக்கு 'இனன்' என்று பெயருண்டு. அவர் சிவனை நம்பி வழிபட்ட தலம் என்பதால், 'இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு, 'இன்னம்பூர்' என மாறியது.

பள்ளியில் சேர்க்கும் முன், குழந்தைகளுடன் பெற்றோர் வழிபாட்டால் கல்வியில் வெற்றி பெறுவர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நெல்லில் எழுதும் சடங்கான 'அட்சர அப்யாசம்' நடத்தப்படுகிறது. பேச்சுத்திறமை, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நெல்லால் நாக்கில் எழுத அறிவுக்கூர்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் பெற இங்கு அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம்.

சிவனை வழிபடும் விதத்தில், மார்ச் 26, - 28, செப்.16-18 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. சிவன் நிகழ்த்தும் ஐந்து தொழில்களை குறிக்கும் விதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என கலசங்கள் உள்ளன.

எப்படி செல்வது: கும்பகோணம் - திருப்புறம்புயம் செல்லும் சாலையில் 8 கி.மீ.,யில் இன்னம்பூர்.
விசேஷ நாட்கள்: சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி 
நேரம்: காலை 7:00 - 12:00 மணி - மாலை 4:00 - 08:00 மணி

No comments:

Post a Comment